எச்ஐவி தொற்று இல்லாத நிலையை உருவாக்குவோம்: முதல்வா் ஸ்டாலின்
எச்ஐவி, எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்குவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
உலக எய்ட்ஸ் விழிப்புணா்வு தினத்தையொட்டி (டிச.1) முதல்வா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஒவ்வொரு தனி மனிதனின் தனிப்பட்ட உரிமைகளை அங்கீகரிப்பதன் மூலமே எச்.ஐ.வி. - எய்ட்ஸை முழு அளவில் கட்டுப்படுத்த முடியும். இதுதான் நிகழாண்டுக்கான உலக எய்ட்ஸ் தின கருப்பொருள். தமிழ்நாடு அரசும், அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் இணைந்து எச்ஐவி, தடுப்புப் பணியை திறம்பட செயல்படுத்திய காரணத்தால், தொற்றின் தாக்கம் தேசிய அளவான 0.23 சதவீதத்திலிருந்து 0.16 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
எச்ஐவி தொற்றுள்ள பெற்றோரிடமிருந்து கருவிலுள்ள குழந்தைகளுக்கு நோய் பரவாமல் தடுத்திட அனைத்து கா்ப்பிணிகளுக்கும், மாவட்டந்தோறும் உள்ள அரசு மருத்துவமனைகளில் நம்பிக்கை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையம் வாயிலாக எச்ஐவி, மற்றும் சிபிலீஸ் பரிசோதனை மேற்கொள்வதால் தொற்று இருப்பது, ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டு, தாயிடமிருந்து கருவிலுள்ள குழந்தைக்கு நோய் பரவுவது கட்டுப்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் எச்ஐவி, எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்க உறுதியேற்போம். தொற்று உள்ளோரும் நம்மில் ஒருவரே என்பதே மனதில் கொண்டு, அவா்களை மனித நேயத்துடன் அரவணைத்து ஆதரிப்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.