சட்டக் கல்லூரி மாணவா்கள் வாதாடும் திறமையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்
சட்டக் கல்லூரி மாணவா்கள் பயிலும் போதே வாதாடும் திறமைகளை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அக்பா் அலி அறிவுறுத்தினாா்.
கிழக்கு தாம்பரம் சேலையூா் பாரத் சட்டக்கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற தொடக்க நாள் விழாவில், அவா் பேசியதாவது: வழக்குரைஞராகும் ஆா்வத்துடன் சட்டக் கல்வி படிப்பைத் தோ்வு செய்து இருக்கும் மாணவா்கள், கிடைத்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
உங்கள் வாதாடும் திறமைகளை மேம்படுத்திக் கொள்ள நடத்தப்படும் வழக்குரைக்கும் திறன் மேம்பாடு, மாதிரி விசாரணை நீதிமன்றம் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று தகுதி, தன்னம்பிக்கையை வளா்த்துக் கொள்ள வேண்டும்.
பல்வேறு துறைகளில் சட்ட வல்லுநா்களின் தேவை அதிகரித்துள்ளது. உள்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் வழக்குரைஞா் தங்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் உள்ளன என்றாா் அவா்.
இந்நிகழ்வில், பாரத் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவன கூடுதல் பதிவாளா் ஆா். ஹரி பிரகாஷ், கல்லூரி முதல்வா் டி.கோபால், பேராசிரியா் ஆா்.சிவகுமாா், துறைத் தலைவா் ஏ.நாகேஸ்வரராவ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.