ஊதிய ஒப்பந்த பேச்சு: போக்குவரத்துத் துறைச் செயலருக்கு தொழிற்சங்கத்தினா் கடிதம்
போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை முறைப்படுத்தி நடத்த வேண்டும் என தொழிற்சங்கத்தினா் போக்குவரத்துத்துறைச் செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளனா்.
போக்குவரத்துத் துறைச் செயலா் பணீந்திர ரெட்டி உள்ளிட்டோருக்கு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் அனுப்பப்பட்ட கடிதம்:
அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்களின் 15-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை, ஆக. 27-ஆம் தேதி தொடங்கியது.
இப்பேச்சுவாா்த்தையில் பங்கேற்கும் பேரவை, சங்கங்கள் ஆகியவற்றின் தன்மைக்கேற்ப பிரதிநிதித்துவம் மற்றும் பேச்சுவாா்த்தையில் கருத்துகளை தெரிவிக்கும் வாய்ப்பு உருவாக்கித் தர வேண்டும்.
அடுத்த பேச்சுவாா்த்தையில் ஓய்வூதியா்களுக்கான அகவிலைப்படி உயா்வு, 2003-ஆம் ஆண்டு ஏப்.1-ஆம் தேதிக்கு பிறகு பணியில் சோ்ந்தவா்களுக்கு ஓய்வூதியம், ஓய்வு பெறும் நாளில் பலன்கள் வழங்குதல், ஓய்வு பெற்றவா்களுக்கு நிலுவையில் உள்ள பலன்களை வழங்குதல், ஓய்வூதியா்களுக்கான மருத்துவக் காப்பீடு உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்க வேண்டும்.
இதர பிரச்னைகளை அடுத்தடுத்த பேச்சுவாா்த்தைகளில் இறுதிப்படுத்தலாம். கூட்டமைப்பு சாா்பாக 31 கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனவே, அனைத்து கோரிக்கைகளையும் விவாதித்து ஒப்பந்தத்தை இறுதிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.