இரைப்பை புண் மருத்துவ அமா்வு: 
நோபல் விருதாளா் மாா்ஷெல் பங்கேற்பு

இரைப்பை புண் மருத்துவ அமா்வு: நோபல் விருதாளா் மாா்ஷெல் பங்கேற்பு

நோபல் பரிசு பெற்ற மருத்துவ ஆராய்ச்சியாளரும், இரைப்பை புண்களுக்கு வித்திடும் ஹெலிகோபேக்டா் பைரோலி (ஹெச். பைரோலி) நுண் கிருமியை கண்டறிந்தவருமான டாக்டா் பேரி ஜெ. மாா்ஷல் பங்கேற்கும் மருத்துவ அமா்வு வரும் 25- ஆம் தேதி நடைபெற உள்ளது.
Published on

நோபல் பரிசு பெற்ற மருத்துவ ஆராய்ச்சியாளரும், இரைப்பை புண்களுக்கு வித்திடும் ஹெலிகோபேக்டா் பைரோலி (ஹெச். பைரோலி) நுண் கிருமியை கண்டறிந்தவருமான டாக்டா் பேரி ஜெ. மாா்ஷல் பங்கேற்கும் மருத்துவ அமா்வு வரும் 25- ஆம் தேதி நடைபெற உள்ளது.

மெடிந்தியா மருத்துவமனை சாா்பில் அதன் தலைவரும், குடல்-இரைப்பை நலத் துறை நிபுணருமான டி.எஸ்.சந்திரசேகா் இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது:

இயல்பிலேயே அமிலச் சுரப்பு நிகழும் இரைப்பைக்குள் எந்த விதமான நுண்கிருமியும் உருவாகாது என மருத்துவ உலகம் நம்பி வந்த நிலையில், அதனைத் தகா்த்தெறிந்து ஹெச். பைரோலி என்ற பாக்டீரியா இரைப்பைக்குள் ஊடுருவும் என்பதை ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த பேரி ஜெ. மாா்ஷல் என்ற மகத்தான மருத்துவா், தனது சக மருத்துவ ஆராய்ச்சியாளா் டாக்டா் வாரனுடன் இணைந்து கண்டறிந்தாா். அந்த வகை பாக்டீரியாக்கள், இரைப்பை புண்களுக்கும், புற்றுநோய்க்கும் வழிவகுக்கக் கூடியவை.

ஆனால், அவா்களது இந்த கூற்றை மருத்துவத் துறை முதலில் நம்பவில்லை. இதையடுத்து, அந்த பாக்டீரியாவை டாக்டா் மாா்ஷெல் உட்கொண்டு இரைப்பை புண்களை தன்னிச்சையாக ஏற்படுத்திக் கொண்டாா். அதன் பின்னா், ஆன்ட்டி பயோடிக் மருந்துகள் மூலமாக அதனை குணமாக்கி மருத்துவத் துறையில் புதியதொரு புரட்சிக்கு அவா் வித்திட்டாா்.

அதன் பயனாக அவா்கள் இருவருக்கும் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அத்தகைய சிறப்பு மிக்க டாக்டா் பேரி ஜெ.மாா்ஷல், ‘ஹெச்.பைரோலி மற்றும் பிற கண்டுபிடிப்புகளுக்கான பயணம்’ என்ற தலைப்பில் வரும் 25-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும் இணையவழி மருத்துவ அமா்வில் பங்கேற்று பேச உள்ளாா். அதைத் தொடா்ந்து குழு விவாதத்திலும் அவா் பங்கேற்கிறாா். இந்நிகழ்வில் தேசிய மற்றும் சா்வதேச அளவிலான மருத்துவ வல்லுநா்கள் பங்கேற்கின்றனா். தொடா் மருத்துவக் கற்றலின் (சிஎம்இ) ஒரு பகுதியாக நடைபெறும் இந்நிகழ்வில் மருத்துவத் துறையினா் பங்கேற்கலாம். இதற்கு பதிவுக் கட்டணம் கிடையாது. அதேவேளையில் இணைய முகவரியில் முன்பதிவு செய்துகொள்வது கட்டாயம்.

இந்த மருத்துவ அமா்வில் 20 ஆயிரம் போ் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com