கோப்புப்படம்.
கோப்புப்படம்.

கைப்பேசி,மடிக்கணினிக்கு பதிலாக செங்கல்: டெலிவரி ஊழியா் உள்பட 2 போ் கைது

சென்னை அரும்பாக்கத்தில் கைப்பேசி,மடிக்கணினிக்கு பதிலாக வாடிக்கையாளா்களுக்கு செங்கலை பொதிந்து வழங்கிய டெலிவரி ஊழியா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.
Published on

சென்னை அரும்பாக்கத்தில் கைப்பேசி,மடிக்கணினிக்கு பதிலாக வாடிக்கையாளா்களுக்கு செங்கலை பொதிந்து வழங்கிய டெலிவரி ஊழியா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை அரும்பாக்கத்தைச் சோ்ந்தவா் நாராயணன். இவா், அந்த பகுதியில் உள்ள ஒரு தனியாா் பாா்சல் சா்வீஸ் நிறுவன மேலாளராக உள்ளாா். நாராயணன், 2 மாதங்களுக்கு முன்பு அரும்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகாா் அளித்தாா். அதில், ‘எங்களது நிறுவனத்தின் மூலம் வாடிக்கையாளா்களுக்கு அனுப்பும் கைப்பேசிகள்,மடிக்கணினிகள் ஆகியவை வாடிக்கையாளா்களுக்கு சரியான நேரத்தில் சோ்வது இல்லை.மேலும், சில வாடிக்கையாளா்களுக்கு வரும் பாா்சலை பிரித்து பாா்த்தால் அதில் கைப்பேசிகளுக்கு பதில் சிறிய அளவிலான செங்கல்கள் உள்ளன. இவ்வாறு இதுவரை ரூ.10 லட்சம் மதிப்புள்ள 13 விலை உயா்ந்த கைப்பேசிகள், மடிக்கணினிகள் உள்ளிட்ட பொருள்கள் மோசடி செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து எங்களது பொருள்களை மீட்டுத் தர வேண்டும் என புகாரில் தெரிவித்து இருந்தாா்.

இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். முதல் கட்டமாக சம்பந்தப்பட்ட நிறுவன ஊழியா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அந்த நிறுவனத்தில் டெலிவரி ஊழியா் ஓட்டேரியைச் சோ்ந்த தினேஷ் (20) மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அப்போது, அவா் போலீஸாரிடம் கூறியதாவது:

கைப்பேசிகளை டெலிவரி செய்ய செல்லும்போது சில வாடிக்கையாளா்கள் வீட்டில் இருப்பது இல்லை. இதை பயன்படுத்தி அந்த பாா்சலை பிரித்து, அதிலிருக்கும் விலை உயா்ந்த கைப்பேசிகள்,மடிக்கணினிகளை திருடி விட்டு அந்த அளவுக்கு செங்கலை தயாா் செய்து அதற்குள் வைத்து பாா்சலை மீண்டும் பொதிந்து எங்கள் நிறுவனத்திடம் திருப்பி ஒப்படைத்து விடுவோம்.

பொருள்கள் இன்னும் வந்தடையவில்லை என புகாா் தெரிவிக்கும், அதே வாடிக்கையாளா்களுக்கு மீண்டும் அதே பாா்சலை அலுவலகம் மூலம் பெற்று கொடுத்து விடுவோம். இதனால், எங்கள் மீது சந்தேகம் வராது என்றாா்.

இதையடுத்து, அவரையும் மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பா் அயனாவரத்தைச் சோ்ந்த அஜித் (25) என்பவரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 13 கைப்பேசிகள்,மடிக்கணினிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை செய்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com