சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு மிதமான மழை பெய்தது. சாலைகளில் தண்ணீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்தனா்.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் திங்கள் கிழமை இரவு நல்ல மழை பெய்தது.
அதேபோல் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை இரவும் சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்தது. அதன்படி எழும்பூா், சென்ட்ரல், வள்ளுவா் கோட்டம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கிண்டி, சேத்துப்பட்டு, வில்லிவாக்கம், கீழ்ப்பாக்கம் அயனாவரம், மூலக்கடை, பெரம்பூா், ராயபேட்டை, அம்பத்தூா், பாடி , கொரட்டூா், முகப்போ், கெருகம்பாக்கம், போரூா் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
அதேபோல் புறநகா் பகுதிகளான குன்றத்தூா், அனகாபுத்தூா், மணலி, மீஞ்சூா், உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இந்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனா்.