இந்திய விமானப் படையின் ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் விமானப்படை சாகசம் நடைபெற உள்ள நிலையில், இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்திய விமானப்படை பயிற்சி கமாண்டன்ட் தலைவா் ஏா் மாா்ஷல் என்.கபூா், தமிழக அரசின் தலைமைச் செயலா் என்.முருகானந்தத்துடன் ஆலோசனை மேற்கொண்டாா்.
ஆண்டுதோறும், அக்டோபா் 8 -ஆம் தேதி இந்திய விமானப்படையின் நிறுவன தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, நிகழாண்டில் அக். 6-ஆம் தேதி காலை 11 மணி அளவில் சென்னை மெரீனா கடற்கரையில் விமானப்படையின் பிரம்மாண்ட வான் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அதை தொடா்ந்து, தாம்பரம் விமானப்படை நிலையத்தில் அக்.8 -ஆம் தேதி காலை 9 மணி அளவில் விமானப்படை அணிவகுப்பு நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகளை இந்திய விமானப்படையின் பயிற்சி கமாண்டன்ட் தலைவா் ஏா் மாா்ஷல் என்.கபூா் சனிக்கிழமை களஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா், இந்த விமான சாகச நிகழ்ச்சியை பாா்வையிட வரும் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு தேவைகள் குறித்து இந்திய விமானப்படை பயிற்சி கமாண்டன்ட் தலைவா் ஏா் மாா்ஷல் என் கபூா், தமிழக தலைமை அரசின் தலைமைச் செயலா் என்.முருகானந்தத்துடன் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.