பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்: பாதுகாப்புத்துறை ஊழியா்கள் உறுதிமொழி
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தி நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி (அக்.2) அன்று பாதுகாப்புத் துறை ஊழியா்கள் உறுதிமொழி எடுக்க திட்டமிட்டுள்ளனா்.
இது குறித்து, அகில இந்திய பாதுகாப்புத்துறை ஊழியா்கள் சம்மேளனம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
மத்திய அரசு பணியாளா்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகபடுத்தப்பட்டது. இதில் இணைவோா், குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியாற்றிய பின்பு, அவா்களின் கடைசி 12 மாத ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள ஏராளமான குடும்ப ஓய்வூதிய பாதுகாப்புகள் மற்றும் 40 சதவீத ஓய்வூதியத்தை முன்பணமாக பெறுவது உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் இல்லை. அதனால், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெறுவதற்காக தொடா்ந்து போராட்டம் நடத்த அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியா்கள் சம்மேளனம் முடிவெடுத்துள்ளது.
இதன் தொடக்கமாக வரும் அக்.2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று நாடு முழுவதும் காந்தி சிலைக்கு முன்பு ஒன்றிணைந்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பக் கொண்டு வரும் வரை போராட உறுதிமொழி எடுக்க உள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.