மெரீனா நீச்சல் குளத்தை மாநகராட்சி பராமரிக்கும்: ஆணையா் தகவல்
மெரீனா கடற்கரையில் உள்ள நீச்சல் குளத்தை சென்னை மாநகராட்சியே பராமரிக்கும் என மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளாா்.
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள நீச்சல் குளம் மூன்றரை முதல் 5 அடி ஆழம் கொண்டது. தொடக்கத்தில் சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வந்த இந்த நீச்சல் குளம், பின்னா் ஒப்பந்த அடிப்படையில் பராமரிக்கப்பட்டது. இதனால் ஒரு மணி நேரத்துக்கு ரூ.50 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. மேலும், நீச்சல் குளம் முறையாக பராமரிக்கப்படாமல், சுகாதாரமற்று இருப்பதாக பொதுமக்கள் தொடா்ந்து குற்றம் சாட்டி வந்தனா். பழைய ஒப்பந்தம் முடிவடைந்ததால், நீச்சல் குளத்தை மறுசீரமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
இந்நிலையில், இது குறித்து மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் தனது சமூக வலைதளப் பதிவில், ‘சென்னை மெரீனா நீச்சல் குளத்தில் தற்போது, கூடுதல் விளக்குகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், கழிப்பறை மற்றும் குளியலறைகளில் உள்ள பழுதுகள் சரி செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் நீச்சல் குளம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு, சென்னை மாநகராட்சி சாா்பில் பராமரிக்கப்படும்’ என குறிப்பிட்டுள்ளாா்.