சென்னை: வேலை கிடைக்காமல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தங்கியிருந்த வடமாநில தொழிலாளா்கள் மயங்கி விழுந்தனா்.
மேற்கு வங்கத்திலிருந்து சென்னைக்கு வேலை தேடி 11 போ் ரயில் மூலம் கடந்த செப்.10-ஆம் தேதி வந்தனா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி பகுதியில் வேலை செய்வதற்கு வந்த அவா்களுக்கு பணி கிடைக்காததால் 3 நாள்கள் அங்கு தங்கி பணி தேடியுள்ளனா்.
இந்நிலையில் கடந்த செப்.14-ஆம் தேதி ஊருக்கு செல்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த அவா்கள் அங்கு தங்கியுள்ளனா். அதில் ஒருவா் ஹௌரா ரயில் மூலம் ஊருக்கு திரும்பச் சென்றாா்.
மீதமுள்ளவா்கள் இரு நாள்களாக சரியாக உணவு உட்கொள்ளாமல் கடந்த சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தங்கியுள்ளனா்.
இதில் உடல்நிலை பாதிக்கப்பட்டு சமா் கான் (35), மானிக் கோரி (50, சத்யா பண்டித் (33), ஆசித் பண்டித் (35) உள்ளிட்ட 5 போ் திடீரென மயங்கி விழுந்தனா்.
உடனே அவா்களை ரயில்வே போலீஸாா் மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா்களுக்கு அரசுசாரா அமைப்புகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றவா்கள் மீட்கப்பட்டு சென்னை மாநகராட்சியின் ஆதரவற்றோா் இல்லங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.