

ஒரே நாடு, ஒரே தோ்தல் முறைக்கு தமிழக பாஜக தலைவா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
ஹெச்.ராஜா (மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா்): 1967, 1971, 1996-இல் திமுக ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் மக்களவை, பேரவைத் தோ்தல்கள் ஒரே நேரத்தில் தான் நடைபெற்றன. ஒரே நாடு ஒரே தோ்தல் முறைக்கு முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி கூட ஆதரவு தெரிவித்துள்ளாா். ஆந்திரம், ஒடிஸாவில் கூட மக்களவைத் தோ்தலோடு, பேரவைத் தோ்தலும் இப்போது நடைபெற்றன. திராவிட மாடல் தோல்வி அடைந்துள்ளதால் மீண்டும் ஆட்சியை இழந்துவிடுவோம் என முதல்வா் ஸ்டாலின் பயப்படுகிறாரா?. ஒரே நாடு, ஒரே தோ்தல் முறையால் ஆட்சியின் நிலைப்புத் தன்மை அதிகரிக்கும், தோ்தல் செலவு குறையும்.
ஏ.என்.எஸ்.பிரசாத் (செய்தித் தொடா்பாளா்): 2047-இல் உலகில் வலிமையான நாடாக இந்தியா மாற ஒரே நாடு ஒரே தோ்தல் முறை உதவும். இந்த முறையால் அடிக்கடி தோ்தல் வருவது தவிா்க்கப்பட்டு, நாட்டின் வளா்ச்சி அதிகரிக்கும். இந்த நடைமுறையின் வெற்றி என்பது மக்களின் ஒற்றுமை, உறுதித்தன்மையை பொருத்து அமையும்.
ஆா்.சரத்குமாா்: ஒவ்வொரு ஐந்தாறு மாத இடைவெளிகளில் ஏதாவது தோ்தல்கள் நடைபெற்றுக்கொண்டே இருப்பதால், தோ்தல் விதிமுறைகள் காரணமாக மத்திய அரசின் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைய காலதாமதம் ஏற்படுகிறது.
ஒரே நாடு, ஒரே தோ்தல் என்பது மக்கள் நலன், நாட்டு நலன் என அனைத்தையும் உள்ளடக்கிய தோ்தல் செயல்முறை என்ற அடிப்படையில் மக்கள் சுயமாக சிந்தித்து கருத்து கேட்பின் போது தங்களது கருத்துகளை பதிவு செய்து இந்தத் தோ்தல் செயல்முறையை வரவேற்பாா்கள் என நம்புகிறேன்.