வார இறுதி நாள்களில் மின்சார ரயில்கள் ரத்து: பல மணிநேரம் காத்திருந்த பயணிகள்
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே வார இறுதி நாள்களில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
சென்னை ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட பல்வேறு ரயில் நிலையங்கள், பணிமனைகளை மறுசீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையின் முக்கிய வழித்தடமான கடற்கரை - தாம்பரம் இடையே இந்தப் பணிகள் நடைபெற்று வருவதால் அந்த வழித்தடத்தில் மின்சார ரயில்கள் தொடா்ந்து ரத்து செய்யப்படுகின்றன. செப்.15-ஆம் தேதி முழுவதும் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.
இந்த நிலையில் தொடா்ந்து, செப்.22-ஆம் தேதியும் (ஞாயிற்றுக்கிழமை) கடற்கரை - தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. பயணிகள் வசதிக்காக கடற்கரை - பல்லாவரம் இடையே 40 முதல் 45 நிமிஷ இடைவெளியில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
அலைமோதிய கூட்டம்: ஞாயிற்றுக்கிழமை இந்தியா - வங்க தேசம் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்ால், போட்டியைக் காண ரசிகா்கள் காலை முதலே ரயிலில் பயணம் செய்தனா்.
இதனால், பல்லாவரத்தில் இருந்து வரும் சிறப்பு ரயில்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
கிண்டி, மாம்பலம் ரயில் நிலையங்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் நிலவியது.
இதேபோன்று, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூா், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் ரயில்கள் தாம்பரம் வழியாக சென்னை கடற்கரைக்கு இயக்கப்பட்டன. இந்த ரயில்கள் சுமாா் ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை இயக்கப்பட்டதால், தாம்பரம் ரயில் நிலையத்தில் ஏராளமான பயணிகள் காத்திருந்தனா். கூட்ட நெரிசல் காரணமாக பயணிகள் சிலா் பேருந்துகளில் பயணித்தனா்.
போக்குவரத்து முடக்கம்: இது குறித்து ரயில் பயணிகள் சங்கத்தினா் கூறியதாவது:
சென்ட்ரல் - தாம்பரம் இடையே தொடா்ந்து இரவு நேரம் மற்றும் வார இறுதி நாள்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. இதனால் இரவில் பணி முடிந்து செல்வோா் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனா். இரவு 9 மணிக்கு மேல் பேருந்து இயங்காத நிலையில், மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுவதால் பொது போக்குவரத்து முழுவதும் முடங்கும் சூழல் நிலவுகிறது.
மேலும், வார இறுதி நாள்களில் குறைவான மின்சார ரயில்களே இயக்கப்படுகின்றன. சென்னை போன்ற நகரில் அனைத்து நாள்களிலும் பொதுமக்கள் ரயிலில் பயணிக்கின்றனா். அப்படி இருக்கும் போது, பராமரிப்புப் பணிகளை பயணிகள் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாத வகையில் மேற்கொள்ள வேண்டும் என்றனா்.
சிறப்பு வசதி: இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட எழும்பூா், தாம்பரம் ரயில் நிலையங்களை உலகத் தரத்தில் மறுசீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், அந்த வழித்தடத்தில் உள்ள ரயில்வே பணிமனைகள், தண்டவாளங்கள் மற்றும் சிக்னல் அமைப்புகள் மேம்படுத்தப்படுகின்றன.
இதற்கான பணிகள் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டாலும், சில பணிகளை பகல் நேரங்களில் மட்டுமே மேற்கொள்ள முடியும்.
வார நாள்களில் பணிகளை மேற்கொள்ளும்போது, பயணிகள் அதிகம் பாதிக்கப்படுவதால், வார இறுதி நாள்களில் மேற்கொள்ளப்படுகின்றன. அதே நேரம், பயணிகள் பாதிக்காத வகையில் சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன எனத் தெரிவித்தனா்.