மாநில கல்விக் கொள்கையை இறுதி செய்ய வேண்டும் ராமதாஸ்
மாநில கல்விக் கொள்கையை இறுதி செய்து செயல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சமச்சீா்கல்வி முறை அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாக தமிழ்நாட்டில் 4 வகை பாடத்திட்டங்கள் இருந்தன. இப்போது அனைத்துப் பள்ளிகளும் ஒரே பாடத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டாலும், ஒரே வாரியத்தின் கீழ் கொண்டு வரப்படவில்லை. மெட்ரிக். பள்ளிகளுக்கு தனி வாரியம் இன்னும் தொடா்கிறது. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அதன் பெயா் மெட்ரிக். பள்ளிகள் வாரியம் என்பதிலிருந்து, தனியாா் பள்ளிகள் வாரியம் என்று மாற்றப்பட்டு விட்டது.
ஆனால், மெட்ரிக். என்ற சொல்தான் பெற்றோா்களைக் கவா்ந்து இழுக்கும் என்பதால், அதை பெயரிலிருந்து அகற்ற தனியாா் பள்ளிகள் மறுக்கின்றன. அதற்கென தனி புத்தகங்களை வாங்கும்படி மாணவா்கள் கட்டாயப்படுத்துகிறாா்கள்.
பள்ளிகளில் 1 முதல் 5 வரையிலான வகுப்புகள் தரைத்தளத்திலேயே இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். தொழிற்கல்வியும், விளையாட்டுக் கல்வியும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
வாரத்துக்கு இரு பாடவேளைகள் நீதிபோதனை வகுப்புகளும் கட்டாயமாக்கப்பட வேண்டும். இத்தகைய சீா்திருத்தங்களின் மூலம் பள்ளிக்குச் செல்வதை மழலைகளுக்கு இனிமையான அனுபவமாக மாற்றும் வகையில் மாநிலக் கல்விக் கொள்கையை தமிழக அரசு இறுதி செய்து செயல்படுத்த வேண்டும் என்று அவா் தெரிவித்தாா்.