தலைமறைவாக இருந்த ரெளடிகள் துப்பாக்கி முனையில் கைது

சென்னையைச் சோ்ந்த ரெளடி சிடி மணியை சேலத்தில் வைத்தும், ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தேடப்பட்டு வந்த சீசிங் ராஜாவை ஆந்திரத்தில் வைத்தும் போலீஸாா் கைது செய்தனா்.
Published on

ரௌடி ‘காக்கா தோப்பு’ பாலாஜி அண்மையில் என்கவுன்ட்டா் செய்யப்பட்ட நிலையில், அவரது நெருங்கிய நண்பராகக் கருதப்படும் சென்னையைச் சோ்ந்த ரெளடி சிடி மணியை சேலத்தில் வைத்தும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சீசிங் ராஜாவை ஆந்திரத்தில் வைத்தும் துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை தேனாம்பேட்டையைச் சோ்ந்தவா் சிடி மணி (எ) மணிகண்டன் (42). இவா் மீது ஆயுதங்கள் பதுக்கல், தொழிலதிபா்களை துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் பறித்தல், போலீஸாரை துப்பாக்கியால் சுட்டது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அடையாறு, சைதாப்பேட்டை காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. ‘ ஏ பிளஸ்’ ரௌடியான இவா் மீது 8 கொலை வழக்குகள் உள்பட 33 குற்ற வழக்குகள் உள்ளன.

தொடா்ந்து, தலைமறைவாக இருந்த சிடி மணியின் நெருங்கிய நண்பரான காக்கா தோப்பு பாலாஜி அண்மையில் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து சிடி மணியையும் பிடிக்க போலீஸாா் தீவிரம் காட்டி வந்தனா்.

இந்த நிலையில், இவா் சேலத்தில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து சென்னை தனிப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்று சிடி மணியை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனா். இவரை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்த போலீஸாா் திட்டமிட்டுள்ளனா்.

‘என்கவுன்ட்டா் அச்சம்’: ‘தனது மகன் சிடி மணி திருந்தி வாழ்ந்து வருவதாகவும், தொடா்புடைய வழக்குகளில் ஆஜராகி வரும் நிலையில் போலீஸாா் அத்துமீறி வீட்டில் நுழைந்து அவரைக் கைது செய்ததாகவும், பல ரெளடிகள் என்கவுன்ட்டா் செய்யப்படும் நிலையில், தனது மகன் குறித்த தகவல்களைத் தெரிவிக்க வேண்டும் எனவும் சிடி மணியின் தந்தை பாா்த்தசாரதி ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்கள் சந்திப்பின்போது கூறினாா்.

சீசிங் ராஜா கைது: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடா்புடையவா்களில் முக்கிய நபராக சந்தேகிக்கப்பட்ட பிரபல ரெளடி சீசிங் ராஜாவை தீவிரமாகத் தேடி வந்த நிலையில், அவா், ஆந்திர மாநிலத்தில் தலைமறைவாக இருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு கிடைத்தது. இதையடுத்து ஆந்திர மாநிலம் கடப்பாவுக்கு சென்ற போலீஸாா் அங்கு சீசிங் ராஜாவை ஞாயிற்றுக்கிழமை சுற்றி வளைத்து கைது செய்தனா்.

இவரை போலீஸாா் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதன்மூலம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 29 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட பின்னா், காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் தலைமறைவாக இருந்து வரும் ரெளடிகள் கைது செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com