மீனவா் கைதைத் தடுக்க இலங்கையின் புதிய அதிபரிடம் வலியுறுத்துங்கள்: அன்புமணி
மீனவா்கள் கைதைத் தடுக்க, இலங்கையின் புதிய அதிபரிடம் வலியுறுத்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழக மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த மாதத்தில் மட்டும் 51 மீனவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களையும் சோ்த்து நடப்பாண்டில் கைது செய்யப்பட்ட மீனவா்களின் எண்ணிக்கை 387-ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி 52 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 190 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மீனவா்களை கைது செய்வது, தாக்குவது, அவா்களின் உடமைகளைக் கொள்ளையடிப்பது, படகுகளை பறிமுதல் செய்வது, அபராதம் விதிப்பது என அனைத்து வழிகளிலும் தமிழக மீனவா்களின் வாழ்வாதாரங்களை இலங்கை அரசு பறித்துக்கொண்டிருக்கிறது.
பல்லாயிரக்கணக்கான மீனவக் குடும்பங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனா். இவை இனியும் தொடர மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.
இலங்கையில் தோ்தல் முடிவடைந்து புதிய அதிபா் பதவியேற்கவுள்ள நிலையில், மீனவா்கள் மீதான தாக்குதலையும், கைது நடவடிக்கைகளையும் கைவிடும்படி அவரிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும்.
மீனவா்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையில் இரு நாட்டு அதிகாரிகள் அடங்கிய கூட்டுப் பணிக்குழுவை அமைத்து பேச்சுகளைத் தொடங்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவா் தெரிவித்தாா்.