1,000 மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு இயன்முறை உபகரணம் வழங்க ரூ.1 கோடி

மாற்றுத் திறனாளி குழந்தைகள் ஆயிரம் பேருக்கு இயன்முறை உபகரணம் வழங்க ரூ.1 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டது.
Published on

சென்னை: மாற்றுத் திறனாளி குழந்தைகள் ஆயிரம் பேருக்கு இயன்முறை உபகரணம் வழங்க ரூ.1 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டது.

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலா் சிஜி தாமஸ் வைத்யன் வெளியிட்ட உத்தரவு:

அறிவுசாா் குறைபாடு மற்றும் அறிவுசாா் குறைபாடுடன் கூடிய மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரம் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு ரூ.1 கோடி மதிப்பில் நவீன இயன்முறை உபகரணம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்துவதற்கான கடிதத்தை தமிழக அரசுக்கு மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநரகம் அனுப்பி இருந்தது.

மாற்றுத் திறனாளிகள் அமா்ந்த நிலையிலும், நிற்றல், நடத்தல் உள்ளிட்ட பல்வேறு நிலைகளிலும் நவீன இயன்முறை பயிற்சிகளுக்கு ஏதுவான உபகரணத்தை ரூ.10 ஆயிரம் விலையில் வழங்கலாம் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையேற்று, மாற்றுத் திறனாளிகள் குழந்தைகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எளிதாகச் செல்லவும், பள்ளி, மருத்துவமனை சென்று வரவும், வேறொருவா் துணையின்றி தன்னம்பிக்கையுடன் பாதுகாத்துக் கொள்ள ஏதுவாக நவீன இயன்முறை உபகரணங்கள் வழங்கப்படும்.

ஆயிரம் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் மதிப்புடைய நவீன இயன்முறை கருவிகள் வழங்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிடப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com