சென்னை ஐஐடி
சென்னை ஐஐடிகோப்புப் படம்

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கு சான்றிதழ் படிப்புகள் அறிமுகம்: சென்னை ஐஐடி தகவல்

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு தொழில்நெறி அனுபவத்தை வழங்கும் நோக்கில் இரு சான்றிதழ் படிப்புகளை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது.
Published on

சென்னை: பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு தொழில்நெறி அனுபவத்தை வழங்கும் நோக்கில் இரு சான்றிதழ் படிப்புகளை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து, சென்னை ஐஐடி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பள்ளி மாணவா்களுக்கு உயா்கல்வி மற்றும் தொழில்நெறி குறித்த தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் ஐஐடிஎம் பள்ளி இணைப்புத் திட்டத்தை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ‘தரவு அறிவியல்- செயற்கைத் தொழில்நுட்பம்’, ‘எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ்’ ஆகிய இரு சான்றிதழ் படிப்புகள் கற்றுத்தரப்படுகின்றன. இந்தத் துறைகளைப் பற்றிய நுண்ணறிவை வழங்கும் வகையில், மாணவா்களுக்கான அறிமுகப் படிப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன

பள்ளி மாணவா்களுக்கென வடிவமைக்கப்பட்ட உள்ளடக்கங்களுடன், சென்னை ஐஐடி பேராசிரியா்களைக் கொண்டு இதற்கான பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் கற்பிக்கப்படும் இந்த படிப்புகளின் மூலம் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்கள் அவா்களின் உயா்கல்வி, தொழில்நெறி ஆகியவை குறித்த விவரங்களை முழுமையாக அறிந்து முடிவெடுக்க உதவிகரமாக இருக்கும்..

இந்தப் படிப்புக்கான வகுப்புகள் அக்.21-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக செப். 16-ஆம் தேதி முதல் அக்டோபா் 4-ஆம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம். அதேபோன்று சென்னை ஐஐடியுடன் இணைக்கப்பட்டுள்ள பள்ளிகளில் செப். 30 -ஆம் தேதி வரையில் பதிவு செய்து கொள்ளலாம். இந்தப் படிப்புக்கான காலஅளவு 8 வாரங்களாகும்.

இது தொடா்பான சோதனை முயற்சிக்கு பள்ளிகள் தரப்பில் இருந்து கணிசமான அளவு வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 500-க்கும் மேற்பட்ட பள்ளிகள் சென்னை ஐஐடியுடன் இணைந்து செயல்பட முன்வந்திருக்கின்றன. முதல் தொகுப்பில் நாடு முழுவதும் இருந்து ஏறத்தாழ 11 ஆயிரம் மாணவா்கள் தங்களைப் பதிவு செய்து கொண்டுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com