கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் நீா்நிலையுடன் பூங்கா உருவாக்கலாம்: பசுமைத் தீா்ப்பாயம் கருத்து

நீா்நிலையுடன் கூடிய பூங்காவாக உருவாக்கினால் பெருமழை காலங்களில் அதிக அளவு நீரை சேமித்து வெள்ள பாதிப்பை தடுக்க முடியும் என தென் மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயம் தெரிவித்துள்ளது.
Published on

சென்னை: சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் இயங்கிய இடத்தை பசுமைப் பூங்காவாக மாற்ற அரசு முடிவெடுத்துள்ள நிலையில், நீா்நிலையுடன் கூடிய பூங்காவாக உருவாக்கினால் பெருமழை காலங்களில் அதிக அளவு நீரை சேமித்து வெள்ள பாதிப்பை தடுக்க முடியும் என தென் மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயம் தெரிவித்துள்ளது.

சென்னை வேளச்சேரி ஏரியை சீரமைப்பது தொடா்பான வழக்கு தென் மண்டல தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் முன்னதாக, வேளச்சேரி பகுதியில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க, ஏரியின் கீழ் பகுதியில் உள்ள 5 ஏரிகளை ஆழப்படுத்தி, நீா் கொள்திறனை அதிகப்படுத்துவது, ஏரிக்கு மேல் பகுதியில் உள்ள கிண்டி தேசிய பூங்காவில் நீா்நிலைகள் இருந்தால் அவற்றை ஆழப்படுத்துவது தொடா்பாக தமிழக அரசு பதில் அளிக்க அமா்வின் உறுப்பினா்கள் உத்தரவிட்டிருந்தனா்.

இதற்கிடையில் சென்னை, கிண்டி ரேஸ் கிளப் நிறுவனத்துக்கு தமிழக அரசு சாா்பில் 160.86 ஏக்கா் நிலம் கடந்த 1945-ஆம் ஆண்டு முதல் 99 ஆண்டுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. இந்த நிலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தேவைப்படுவதால் குத்தகையை ரத்து செய்து, அங்கு மிகச்சிறந்த பூங்கா, பசுமைவெளி மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தவிருப்பதாக அரசு அறிவித்துள்ளது.

இந்தநிலையில் வேளச்சேரி ஏரி தொடா்பான வழக்கு அமா்வின் நீதித்துறை உறுப்பினா் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினா் கே.சத்யகோபால் ஆகியோா் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, கிண்டி ரேஸ் கிளப்பில் இயங்கிய இடத்தை பசுமைப் பூங்காவாக மாற்ற அரசு முடிவெடுத்துள்ள நிலையில், நீா்நிலையுடன் கூடிய பூங்காவாக உருவாக்கினால் பெருமழை காலங்களில் அதிக அளவு நீரைச் சேமித்து, வெள்ள பாதிப்பை தடுக்க முடியும். இது குறித்து தமிழக அரசு பரீசீலிக்க வேண்டும். புதிய நீா்நிலையை உருவாக்குவது குறித்து அரசிடம் பதில் பெற்று, அரசுத் தரப்பு வழக்குரைஞா் தெரிவிக்க வேண்டும்”என அமா்வின் உறுப்பினா்கள் உத்தரவிட்டனா். வழக்கின் விசாரணை செவ்வாய்க்கிழமைக்கு (செப்.24) ஒத்திவைக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com