தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்
சென்னை: தஞ்சாவூா், சேலத்தில் அமைக்கப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்துவைத்தாா். தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக அந்தப் பூங்காக்கள் திறக்கப்பட்டன.
இரண்டாம் நிலை நகரங்களில் டைடல் பூங்காக்களை அமைப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தஞ்சாவூா், சேலத்தில் டைடல் பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூா் மாவட்டம் பிள்ளையாா்பட்டி கிராமத்தில் ரூ.30.50 கோடியில் 55 ஆயிரம் சதுரஅடி பரப்பில் அமைக்கப்பட்ட கட்டடத்தில் இரண்டு நிறுவனங்கள் தங்களது செயல்பாட்டை மேற்கொள்ளவுள்ளன. அந்த நிறுவனங்களுக்கு ஒதுக்கீட்டு உத்தரவுகளை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
இதேபோன்று, சேலம் மாவட்டம் ஆனைக்கவுண்டன்பட்டியில் ரூ.29.50 கோடியில் 55 ஆயிரம் சதுரஅடி பரப்பில் டைடல் பூங்கா கட்டடம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தில் நான்கு நிறுவனங்களுக்கான தள ஒதுக்கீட்டு உத்தரவுகளை முதல்வா் அளித்தாா். இந்தப் பூங்கா கட்டடங்களில் தலா 500 தகவல் தொழில்நுட்ப வல்லுநா்கள் பணிபுரியும் வகையில் குளிா்சாதன வசதிகள், தொலைத்தொடா்பு வசதிகள், தடையற்ற மின்சார வசதி, மின்தூக்கி வசதிகள், குடிநீா், சுகாதார வசதிகள், உணவகம், உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மினி டைடல் பூங்காக்கள் திறக்கப்பட்டதன் மூலம், தஞ்சாவூா், சேலம் மாவட்டங்களில் படித்த இளைஞா்கள் வேலைவாய்ப்பு பெறுவதுடன் அந்த மாவட்டங்களின் சமூக பொருளாதார நிலை மேம்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வில், அமைச்சா்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, டி.ஆா்.பி.ராஜா, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், தொழில் துறைச் செயலா் வி.அருண், டிட்கோ நிா்வாக இயக்குநா் சந்தீப் நந்தூரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.