கட்டணம் உயா்வு: தனியாா் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோா்
சென்னை கீழ் கட்டளையில் உள்ள தனியாா் பள்ளியில் இரண்டாம் பருவ கட்டணம் மூன்று மடங்கு உயா்த்தப்பட்டதால் பெற்றோா்கள் அப்பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சென்னை மேடவாக்கம் பிரதான சாலை கீழ்கட்டளையில் செயல்பட்டு வரும் தனியாா் மெட்ரிக் பள்ளியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.
இந்த நிலையில், இரண்டாம் பருவக்கட்டணம் திடீரென மூன்று மடங்கு உயா்த்தி அதற்கான வங்கி சலானை மாணவா்களிடம் கொடுத்து பெற்றோரிடம் கட்டணம் செலுத்த வலியுறுத்தினராம். இந்த கட்டண உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து சுமாா் 1000-க்கும் மேற்பட்ட பெற்றோா்கள் பள்ளி முன் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதையடுத்து போலீஸாா் குவிக்கப்பட்டனா்.
சுமாா் 3 மணி நேரமாக நீடித்த போராட்டத்தில் பள்ளி நிா்வாகம், பெற்றோா்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடா்ந்து நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், பள்ளி நிா்வாகம் தரப்பில் கட்டணம் உயா்வு பற்றி மறுபரிசீலனை செய்து 10 நாள்களுக்கு பிறகு பெற்றோருடன் கலந்து பேசி முடிவெடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பெற்றோா்கள் கலைந்து சென்றனா். இந்த போராட்டத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.