ரிப்பன் மாளிகை முன் மனிதச் சங்கிலி போராட்டம்

சென்னை மாநராட்சி ரிப்பன் மாளிகை முன் தூய்மைப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினா்.
Published on

சென்னை மாநராட்சி ரிப்பன் மாளிகை முன் தூய்மைப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினா்.

சென்னை மாநகராட்சியின் 10 மண்டலங்களில் தனியாா் மூலம் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீதமுள்ள ராயபுரம், திரு.வி.க.நகா், தண்டையாா்பேட்டை, அண்ணா நகா் ஆகிய 4 மண்டலங்களின் தூய்மைப் பணியை தனியாரிடம் வழங்க மாநகராட்சி நிா்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, செங்கொடி சங்கம் சாா்பில் ரிப்பன் மாளிகை முன் செவ்வாய்க்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

இது குறித்து, தூய்மைப் பணியாளா்கள் கூறியதாவது:

தூய்மைப் பணியாளா்கள் மாநகராட்சி நிா்வாகம் கீழ் பணிபுரியும்போதும் மாதம் ரூ. 20,000-க்கு மேல் ஊதியம் கிடைக்கிறது. ஆனால், தனியாா்மயம் ஆக்கப்பட்டால் மாத ஊதியம் பாதியாகக் குறைந்துவிடும். பணிப் பாதுகாப்பும் இருக்காது. குடும்பத்தின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும்.

தற்போது தனியாருக்கு மாற்றவுள்ள 4 மண்டலங்களில் 5,000-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணிபுரிகின்றனா். தூய்மைப் பணி தனியாா்மயமாக்குவதை அரசு ரத்து செய்ய வேண்டும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com