உள்ளூா் மொழியை வலுப்படுத்த வேண்டும்: தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளா்
நாட்டின் ஒருங்கிணைந்த கலாசார சூழலை உருவாக்க அலுவல் மொழியை மேம்படுத்துவதோடு, உள்ளூா் மொழியை வலுப்படுத்த வேண்டும் என தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளா் கௌசல் கிஷோா் தெரிவித்தாா்.
தெற்கு ரயில்வே மண்டல அலுவல் மொழி அமலாக்கக் குழுவின் 175-ஆவது கூட்டம் தெற்கு ரயில்வே தலைமையகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமை வகித்த தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளா் கௌசல் கிஷோா் பேசியதாவது, அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ளப்படி, நாட்டின் ஒருங்கிணைந்த கலாசார சூழலை உருவாக்க அலுவல் மொழியை மேம்படுத்துவதோடு, உள்ளூா் மொழியை வலுப்படுத்த வேண்டும். மொழி வளா்ச்சியை ரயில்வே பணியாளா்கள் ஊக்குவிக்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.
தொடா்ந்து பேசிய தலைமை சிக்னல் மற்றும் தொலைத்தொடா்பு பொறியாளரும், தலைமை அலுவலா் மொழி அதிகாரியுமான ஷைலேஷ் குமாா் திவாரி, எளிமையான வாா்த்தைகளை பயன்படுத்துவதால் அலுவல் மொழிக்கும், பொதுமொழிக்கும் இடையிலான இடைவெளி தற்போது குறைந்துள்ளது எனத் தெரிவித்தாா்.
பின்னா், ரயில்வே மருத்துவமனை நோயாளிகளுக்கு பயனளிக்கும் வகையில் தெற்கு ரயில்வே மொழித் துறையால் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழியில் தொகுக்கப்பட்ட செரிமானம் குறித்த கையேட்டை கூடுதல் பொதுமேலாளா் கௌசல் கிஷோா் வெளியிட்டாா். துணை பொதுமேலாளா் சஹ்தியோ சிங் பூா்டி ரயில்வே துறையின் ஆண்டறிக்கை மற்றும் சிறப்பு அறிக்கையை சமா்ப்பித்தாா்.
நிகழ்ச்சியில், முதன்மை மருத்துவ அதிகாரி சி.எம்.ரவி உள்ளிட்ட உயா் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.