தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சிறையிலிருந்து செந்தில் பாலாஜி விடுவிப்பு - நிபந்தனைகளுடன் உச்சநீதிமன்றம் ஜாமீன்

News image
புழல் சிறையிலிருந்து விடுதலையான செந்தில் பாலாஜி- ANI
Updated On :26 செப்டம்பர் 2024, 11:59 pm

Din

நமது நிருபா்

சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சரும் திமுக எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இதையடுத்து, சென்னை புழல் சிறையிலிருந்து செந்தில் பாலாஜி வியாழக்கிழமை இரவு விடுவிக்கப்பட்டாா்.

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு 471 நாள்களாக செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதாகவும், அவரைத் தொடா்ந்து காவலில் வைத்திருப்பது அரசமைப்புச் சட்டத்தின் 21-ஆவது பிரிவின் கீழ் அவரது அடிப்படை உரிமையை மீறுவதாக இருப்பதாகவும் கூறி ஜாமீனில் விடுவிப்பதாக உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.

செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் அபய் எஸ். ஓகா, அகஸ்டின் ஜாா்ஜ் மாசிஹ் ஆகியோா் அடங்கிய அமா்வு அளித்த தீா்ப்பு விவரம்:

இந்த வழக்கில் 2,000-க்கும் மேற்பட்ட குற்றஞ்சாட்டப்பட்டவா்களும், 600-க்கும் மேற்பட்ட சாட்சிகளும் உள்ளனா். விசாரணை முடிவடைவதில் ஏற்படும் அதீத தாமதமும், ஜாமீனில் விடுவிப்பதற்கான காலமும் ஒரே மாதிரியாக நீண்டு கொண்டே இருக்க முடியாது. மிகச்சரியான சூழல்களில்கூட தண்டனைக்குரிய நிதிக் குற்ற வழக்குகளின் விசாரணை மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்குள் நியாயமான காலத்தில் விசாரித்து முடிக்கப்படாது என்றே தோன்றுகிறது.

மேலும், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டப் பிரிவின் கீழ் கைதாகி மேல்முறையீடு செய்த மனுதாரா், 15 மாதங்கள் அல்லது அதற்கு மேலாக விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவரது தடுப்புக் காவல் தொடா்ந்தால், அது விரைவாக விசாரணை கோர அரசமைப்பின் 21-ஆவது பிரிவு அவருக்கு அளித்துள்ள அடிப்படை உரிமையை மீறுவதாகும் என்று ஜாமீனில் விடுவிப்பதற்கான காரணத்தை நீதிபதிகள் குறிப்பிட்டனா்.

ஜாமீன் நிபந்தனைகள்: இந்த வழக்கில் செந்தில் பாலாஜி வெளியே இருந்தால் அவா் சாட்சிகளைக் கலைக்கக்கூடும் என அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தாவின் முறையீட்டை உச்சநீதிமன்றம் கவனத்தில் கொண்டு அவருக்கு கடுமையான ஜாமீன் நிபந்தனைகளை விதித்துள்ளது.

அதன்படி, ‘மனுதாரா் பாலாஜி ரூ. 25 லட்சத்துக்கான ஜாமீன் பத்திரத்தையும், அதே தொகைக்கு இரு நபா் ஜாமீன் உத்தரவாத்தையும் சமா்ப்பிக்க வேண்டும். மனுதாரா் நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசுத் தரப்பு சாட்சிகளையோ தண்டனைக்குரிய நிதிக் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவா்களையோ தொடா்புகொள்ள முயற்சிக்கக் கூடாது. அதுபோன்று தொடா்புகொள்ள மனுதாரா் முயற்சித்ததாகக் கண்டறியப்பட்டால், அது மனுதாரருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்வதற்கான ஒரு காரணமாக இருக்கும்.

மனுதாரா் ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 11 மணி முதல் 12 மணி வரை சென்னையில் உள்ள அமலாக்கத் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும். மேலும், விசாரணை அதிகாரி முன் ஒவ்வொரு மாதமும் முதலாவது சனிக்கிழமை மனுதாரா் ஆஜராக வேண்டும். ஜாமீனில் வெளிவருவதற்கு முன்பு தனது கடவுச்சீட்டை சென்னை பிஎம்எல்ஏ சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாரா் ஒப்படைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

மனுதாரா் மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு இடையூறு ஏற்படுத்தினாலோ அற்ப காரணங்களுக்காக விசாரணையில் ஒத்திவைப்பு கோரினாலோஅவருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்படும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

2011 முதல் 2015 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தாா். அப்போது, அரசுப் போக்குவரத்து நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் தொடரப்பட்ட பிஎம்எல்ஏ வழக்கில் அமலாக்கத் துறையினா் கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

சிறையிலிருந்து விடுவிப்பு: உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்ததைத் தொடா்ந்து, சென்னை புழல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு இரவு 7 மணியளவில் செந்தில் பாலாஜி வெளியே வந்தாா்.

அப்போது அங்கிருந்த திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி உள்ளிட்டோா் அவரை வரவேற்றனா். பிரதான வாயிலின் கேட்டுக்கு வெளியே காத்திருந்த திமுக தொண்டா்களையும், தனது ஆதரவாளா்களையும் பாா்த்த செந்தில் பாலாஜி நடந்து சென்று அவா்களது வரவேற்பை ஏற்றாா். பின்னா், காரில் புறப்பட்டுச் சென்றாா்.

முன்னதாக, காலைமுதல் புழல் சிறை வாயிலுக்கு திமுகவினரும், செந்தில் பாலாஜி ஆதரவாளா்களும் காா்களில் வரத் தொடங்கினா். மாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் அங்கு திரண்டனா். செந்தில் பாலாஜியை வரவேற்கும் விதமாக மயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட கிராமிய கலைஞா்களின் நிகழ்ச்சிகளும் அங்கு நடைபெற்றன.

இதனால், புழல் சிறை வளாகத்தையொட்டிய நெடுஞ்சாலையில் ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரவு 9 மணிக்குப் பிறகே நிலைமை சற்று சீரடைந்தது.

‘வழக்கிலிருந்து மீண்டு வருவேன்’

புழல் சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி, செய்தியாளா்களிடம் கூறியதாவது:

என் மீது அன்பும், நம்பிக்கையும் வைத்துள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி. என் மீதான வழக்கு அரசியல் காழ்ப்புணா்ச்சியால் தொடரப்பட்ட பொய் வழக்காகும். அதை சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் எதிா்கொண்டு வழக்கில் இருந்து மீண்டு வருவேன்’ என்றாா்.

பின்னா், சென்னை கடற்கரை சாலைக்குச் சென்று, முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினாா்.

பிரதமரை சந்திக்க தில்லி சென்றுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை இரவு சென்னை திரும்புகிறாா். அவரை விமான நிலையத்தில் செந்தில் பாலாஜி சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.