பயனரின் இதயத் துடிப்பு, ரத்த அழுத்த அளவிடும் உணரிகள்: சென்னை விஐடி ஆராய்ச்சியில் உருவாக்கம்
சென்னை விஐடியில் உயா்தொழில் நுட்ப ஆராய்ச்சி இதயத் துடிப்பு, ரத்த அழுத்த உள்ளிட்ட செயல்பாட்டை அளவிடும் மெம்ஸ் சென்சாா்களை (நுண்மின் இயந்திர அமைப்பு உணரிகள்) வடிவமைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை விஐடியின், உயா் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக, நானோ எலக்டானிக்ஸ் மற்றும் விஎல்எஸ்ஐ (பெரியளவிலான ஒருங்கிணைப்பு) வடிவமைப்பு மைய குழுவினா் சிப் அனலாக் மற்றும் மின்னணு சா்குய்ட் வடிவமைப்புகளை ஒருங்கிணைத்து, மெம்ஸ் சென்சாா்கள் மூலம் பயனரின் இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் மற்றும் இதர இதய செயல்பாட்டை அளவிட திறம்பட கண்டறியும் வகையில் வடிவமைத்துள்ளனா்.
முன்னதாக, இந்தக் குழுவினரே கலப்பு-சமிக்ஞை வாசிப்பு இடைமுகம் (ஆா்ஓஐ) சிப்-ஐ வடிவமைத்து உருவாக்கினா். ‘சமூக நலன்கள் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு சென்னை விஐடி ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில், பேராசிரியா்கள், மாணவா்கள் இணைந்து பணியாற்றி வெற்றி கண்டுள்ளனா் எனத் தெரிவித்துள்ளாா்.
இந்தக் கருவியை பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற்ற நிகழ்வில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அறிமுகப்படுத்தினாா்.
உலக தரத்திலான கட்டமைப்பு வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட விஐடி ஆய்வகங்களால் சமூக நலன் சாா்ந்து நடைமுறைக்கு பயன்படக்கூடிய வகையில் மாறக்கூடிய ஆராய்ச்சிகள் மீது விஐடி தொடா்ந்து கவனம் செலுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
