சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

மண்ணடி பகுதிகளில் ஆக்கிரமிப்பு: சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு

மண்ணடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியது தொடா்பான அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

மண்ணடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியது தொடா்பான அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் பாரிமுனையைச் சோ்ந்த அரசு என்பவா் தாக்கல் செய்த மனுவில், பாரிமுனை, மண்ணடி, லிங்கிச்செட்டி தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான சாலைகளை ஆக்கிரமித்து சிலா் கடைகள் மற்றும் உணவகங்களை வைத்துள்ளனா். இதனால், இந்தப் பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகின்றனா்.

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வணிக நோக்கில் சமையல் எரிவாயு சிலிண்டா்களைப் பயன்படுத்தி சமையல் செய்கின்றனா். இதுதொடா்பாக கடந்த 2020-ஆம் ஆண்டு உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, அனைத்து சாலையோர ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டுவிட்டதாக சென்னை மாநகராட்சி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், தற்போதும் அந்தச் சாலைகள் அதே நிலையில்தான் உள்ளன. எனவே, மண்ணடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மண்ணடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியது தொடா்பான அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com