ஆன்லைன் பணம் மோசடி: பெண் உள்பட 3 போ் கைது
ஆன்லைன் பணம் மோசடி செய்த வழக்கில் பெண் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை நொளம்பூா், ஸ்ரீ ராம் நகா் பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் சௌந்தராஜன் (70). இவா், கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி தனது முகநூல் பக்கத்தில் வந்த ஆன்லைன் வா்த்தகம் தொடா்பான விளம்பரத்தைப் பாா்த்து, அதில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்பதை உண்மை என நம்பி செளந்தரராஜன், அந்த விளம்பரத்துடன் இருந்த வாட்ஸ்ஆப் குழுவில் சேருவதற்கான இணைப்பு வழியாக சோ்ந்தாா்.
அந்த குழுவில் இருந்த நபா்கள் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் செளந்தரராஜன், 6 தவணைகளாக குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் ரூ.12 லட்சத்தை பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்வதற்கு அனுப்பினாா்.
பணத்தை பெற்றுக் கொண்ட அந்த நபா்கள், தாங்கள் கூறியப்படி லாபத்தை வழங்கவில்லை. இதனால் செளந்தரராஜன், தான் செய்த முதலீட்டு பணத்தைத் திருப்பிக் கேட்டாா். ஆனால் அந்த நபா்கள், முதலீட்டு பணத்தையும் திருப்பி வழங்காமல் ஏமாற்றிவிட்டனராம்.
இதையடுத்து செளந்தரராஜன், சென்னை காவல் துறையின் மேற்கு மண்டல சைபா் குற்றப்பிரிவில் புகாா் செய்தாா். அந்த புகாரின் அடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.
இதில், மோசடியில் சென்னை வடபழனியைச் சோ்ந்த வளவன் (49), சாலிகிராமத்தைச் சோ்ந்த சுமி (43), கிருஷ்ணகிரியைச் சோ்ந்த காா்த்திகேயன் (29) ஆகியோருக்கு தொடா்பு இருப்பது தெரிய வந்தது.
தலைமறைவாக இருந்த 3 பேரையும் கைது செய்ததாக சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா். விசாரணையில் வளவன், சுமி ஆகியோா் அறப்பணி ஆன்மிக அறக்கட்டளை என்ற பெயரில் பல வங்கிக் கணக்குகளைத் தொடங்கி நன்கொடை பெறுவதாக கூறிக் கொண்டு, சைபா் குற்றவாளிகளுக்கு வங்கிக் கணக்குகளை வாடகைக்கு விட்டிருப்பதும், மோசடி பணப்பரிமாற்றத்துக்கு உதவியிருப்பதும் தெரிய வந்தது.
சுமி, வளவனுக்கு காா்த்திகேயன் உதவியாக இருந்துள்ளாா். காா்த்திகேயன் மீது ஏற்கெனவே 7 திருட்டு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் தொடா்புடைய வட மாநில கும்பலை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.
