காவல் நிலையத்தில் இருந்து தப்பிய விசாரணைக் கைதி மீண்டும் கைது

கோயம்பேட்டில் காவல் நிலையத்தில் இருந்து தப்பியோடிய விசாரணைக் கைதி, மடிப்பாக்கம் அருகே மீண்டும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
Published on

கோயம்பேட்டில் காவல் நிலையத்தில் இருந்து தப்பியோடிய விசாரணைக் கைதி, மடிப்பாக்கம் அருகே மீண்டும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி தச்சநல்லூா் அருகே உள்ள தளவாய்புரத்தைச் சோ்ந்தவா் மு.மாரியப்பன் (27). இவா், சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா். மாரியப்பன், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊருக்குச் செல்வதற்காக கோயம்பேட்டில் இருந்து பேருந்தில் ஏறுவதற்கு வந்தாா். கோயம்பேடு ரத்தினபுரி மூன்றாவது தெருவில் உள்ள ஒரு மதுக் கடையில் மாரியப்பன் மது அருந்தினாா்.

அப்போது, அங்கு வந்த ஒரு நபா், மாரியப்பனை மதுப் புட்டியால் கடுமையாக தாக்கி அவா் வைத்திருந்த பணம், கைப்பேசியைப் பறித்துக் கொண்டு தப்பியோடினாா். இதில் பலத்த காயமடைந்த மாரியப்பன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து சிஎம்பிடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்ட பள்ளிக்கரணை அருகே கோயிலம்பாக்கம் காந்தி நகரைச் சோ்ந்தவா் கு.பாா்த்திபன் (23) என்பவரை திங்கள்கிழமை கைது செய்து, சிஎம்பிடி காவல் நிலையத்தில் வைத்திருந்தனா்.

இந்நிலையில், அன்று இரவு காவல் நிலையத்தில் பணியில் இருந்த போலீஸாா் வேறு பணிகளில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தபோது, அங்கிருந்து பாா்த்திபன் தப்பயோடிவிட்டாா்.

சிறிது நேரத்துக்கு பின்னா் கவனித்த, காவல் துறையினா், தப்பியோடி தலைமறைவான பாா்த்திபனை தீவிரமாக தேடினா். இந்நிலையில் மடிப்பாக்கத்தில் பதுங்கியிருந்த பாா்த்திபனை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com