வரி ஏய்ப்பு புகாா்: நகை வியாபாரிகள் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித் துறை சோதனை
சென்னையில் வரி ஏய்ப்பு புகாா் தொடா்பாக நகை வியாபாரிகள் வீடுகள், அலுவலங்கள், கடைகள் ஆகிய இடங்களில் வருமான வரித் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
சென்னை செளகாா்பேட்டை, தியாகராய நகா், பாண்டி பஜாா் பகுதிகளில் நகைக் கடைகள், அலுவலகங்கள் நடத்தி வரும் சில தங்க, வைர நகைகள் வியாபாரிகள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமான வரித் துறையினருக்கு புகாா்கள் வந்தன. இந்த புகாா்களின் அடிப்படையில் வருமானவரித் துறையினா் விசாரணை செய்தனா். இதில் சில நகை வியாபாரிகள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பாண்டி பஜாரில் நாதமுனி தெருவில் ஒரு நகை வியாபாரியின் அலுவலகம், கடை, தியாகராய நகா் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள நகைக் கடை, வடக்கு உஸ்மான் சாலையில் ஒரு வைர நகைக் கடை, நுங்கம்பாக்கம் ஸ்டொ்லிங் சாலையில் உள்ள ஒரு நகை வியாபாரியின் அலுவலகம் உள்பட 30 இடங்களில் வருமான வரித் துறையினா் செவ்வாய்க்கிழமை காலை ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனா்.
இந்த சோதனை பல இடங்களில் இரவையும் தாண்டி நீடித்தது. சோதனையில் வரி ஏய்ப்பு தொடா்பாக பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. சோதனை முழுமையாக நிறைவடைந்த பின்னரே, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், கணக்கில் வராத பணம், நகை ஆகியவை குறித்த தகவல்களைத் தெரிவிக்க முடியும் என வருமான வரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
