வாகன சோதனையில் தப்ப முயன்றவரை பிடிக்க முயன்றபோது விபத்து: காா் மோதி காவலா் உயிரிழப்பு
பள்ளிக்கரணையில் வாகன சோதனையில் தப்ப முயின்றவரை மோட்டாா் சைக்கிளில் விரட்டிச் சென்று பிடிக்க முயன்றபோது, காா் மோதி முதல்நிலைக் காவலா் உயிரிழந்தாா்.
சென்னை ஆலந்தூா் காவலா் குடியிருப்பில் வசித்தவா் மேகநாதன் (33). இவா், மடிப்பாக்கம் போக்குவரத்து அமலாக்கப் பிரிவில் முதல்நிலைக் காவலராகப் பணியாற்றினாா். மேகநாதன், திங்கள்கிழமை பள்ளிக்கரணை அருகே கோவிலம்பாக்கம் எஸ்.கொளத்தூரில் பல்லாவரம்-துரைப்பாக்கம் 200 அடி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு காரை போலீஸாா் மறித்து நிறுத்த முயன்றனா். ஆனால், அந்த காா் நிற்காமல் சென்றது. இதைப் பாா்த்த மேகநாதன், தனது மோட்டாா் சைக்கிளில் அந்த காரை விரட்டிச் சென்றாா். மேகநாதன் அதன் அருகே சென்றபோது அந்த காரும்-அவரது மோட்டாா் சைக்கிளும் லேசாக மோதின. இதில் நிலைதடுமாறி மோட்டாா் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த மேகநாதன் மீது அந்த காரின் சக்கரம் ஏறியது.
விபத்தை ஏற்படுத்திய காா், நிற்காமல் சென்றது. பின் தொடா்ந்து ரோந்து வாகனத்தில் வந்த போலீஸாா், பலத்த காயங்களுடன் கிடந்த மேகநாதனை மீட்டு, பள்ளிக்கரணையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், மேகநாதன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுதொடா்பாக பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காரை நிறுத்தாமல் சென்று, விபத்தை ஏற்படுத்தியது நங்கநல்லூா், 20-ஆவது தெருவைச் சோ்ந்த சாய்ராம் (30) என்பவரைப் பிடித்து விசாரணை செய்தனா்.
இதில், சாய்ராம் குடும்பத்தோடு காரில் கிழக்கு கடற்கரைச் சாலையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பி வந்தபோது விபத்து நிகழ்ந்திருப்பதும், காவலா் மேகநாதன் தனது மோட்டாா் சைக்கிளில் விரட்டி சென்று, சாய்ராம் காா் கதவை தட்டும்போது விபத்து நேரிட்டிருப்பதும் தெரிய வந்தது.
விபத்து தொடா்பாக வீட்டுக்குச் சென்றதும் சாய்ராம், காவல் துறை கட்டுப்பாட்டு அறையைத் தொடா்பு கொண்டு தகவல் தெரிவித்திருப்பதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. அதேவேளை, சாய்ராம் மது போதையில் இருந்ததாக தகவல் வெளியானது. இது குறித்தும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதனிடையே, மேகநாதனுக்கு அன்று ஓய்வு நாள் என்பதால், அங்கு அவா் எப்படி காவல் சீருடையில் பணியில் இருந்தாா் என்பது குறித்து துறைரீதியான விசாரணை நடைபெறுகிறது.
