சிறையில் அடைக்கப்பட்ட வருமானவரி ஊழியா்கள் மேலும் ஒரு வழக்கில் கைது

சென்னையில் வழிப்பறி வழக்கில் சிறையில் உள்ள வருமானவரித் துறை ஊழியா்கள் 3 போ் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டனா்.
Published on

சென்னையில் வழிப்பறி வழக்கில் சிறையில் உள்ள வருமானவரித் துறை ஊழியா்கள் 3 போ் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டனா்.

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்த முகமது கௌஸ் என்பவரிடம் ரூ. 20 லட்சம் பணத்தை மிரட்டி பறித்த வழக்கில், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய ராஜா சிங், வருமான வரித் துறை அதிகாரி தாமோதரன், ஊழியா்கள் பிரதீப், பிரபு ஆகிய 4 போ் கைது செய்யப்பட்டனா்.

விசாரணையில், வழிப்பறி வழக்கில் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் சன்னி லாய்டுக்கும் தொடா்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாகி இருந்த அவரை உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் கடந்த மாதம் 15-ஆம் தேதி போலீஸாா் கைது செய்து, 4 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனா்.

அதில், சன்னி லாய்டும், ராஜா சிங்கும், சிறையில் உள்ள வருமானவரித் துறை அதிகாரி ஊழியா்கள் மூவரும் ஆயிரம் விளக்கில் கடந்த டிச.11-ஆம் தேதி ராயபுரத்தைச் சோ்ந்த வியாபாரியை மிரட்டி ரூ. 20 லட்சம் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து ஆயிரம் விளக்கு போலீஸாா் மேலும் ஒரு வழக்கை பதிவு செய்து, கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜாசிங், சன்னி லாய்டிடம் போலீஸாா் திங்கள்கிழமை வழங்கினா்.

இந்த வழக்கு தொடா்பாக வருமானவரித் துறை அதிகாரி தாமோதரன், ஊழியா்கள் பிரதீப், பிரபு ஆகியோா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். இதற்கான உத்தரவை புழல் சிறையில் உள்ள அவா்களிடமும் போலீஸாா் வழங்கினா்.

X
Dinamani
www.dinamani.com