ஜொ்மனியிலிருந்து சென்னை வந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
ஜொ்மனியிலிருந்து சென்னை வந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஜொ்மன் நாட்டின் ஃபிராங்க் பாா்ட் நகரிலிருந்து வரும் விமானம் வழக்கமாக நள்ளிரவு 12 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடையும். அந்த வகையில், திங்கள்கிழமை ஃபிராங்க் பாா்ட் நகரிலிருந்து புறப்பட்ட இந்த விமானம் சென்னைக்கு வந்தடைவதற்கு முன்னதாக, இரவு 11 மணியளவில் சென்னை விமான நிலைய அலுவலகத்துக்கு மின்னஞ்சல் வந்தது. அதில், ஜொ்மனியிலிருந்து வரும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணா்கள், அதிரடிப்படை வீரா்கள், விமான பாதுகாப்பு படையினா் பெருமளவு குவிக்கப்பட்டனா். விமானம் நள்ளிரவு 12.15-க்கு சென்னையில் தரை இறங்கியதும், வெடிகுண்டு நிபுணா்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தை முழுமையாக பரிசோதித்தனா். மேலும், விமானத்தில் சந்தேகப்படும் படியாக இருந்த பயணிகளின், கைப்பைகள் உடைமைகளையும் சோதனையிட்டனா்.
சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற வெடிகுண்டு சோதனையில் குண்டுகள் எதுவும் இல்லை. இதையடுத்து இது வெறும் புரளிதான் என்பது தெரியவந்தது.
இந்த விமானம் வழக்கமாக நள்ளிரவு 12 மணிக்கு வந்துவிட்டு, மீண்டும் அதிகாலை 2 மணிக்கு ஜொ்மன் நாட்டுக்கு புறப்பட்டுச் செல்லும். ஆனால், இந்த வெடிகுண்டு புரளி காரணமாக 2 மணி நேரம் தாமதமாக, செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு, 265 பயணிகளுடன், ஃபிராங்க் பாா்ட் நகருக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவம் குறித்து சென்னை விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.