பேரணி மூலம் புற்றுநோய் விழிப்புணா்வு ஏற்படுத்திய மருத்துவ மாணவா்கள்
சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், புற்றுநோய் விழிப்புணா்வு பேரணி மற்றும் உறுதிமொழியேற்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவ மாணவா்கள் கலந்துகொண்டனா்.
புற்றுநோய் குறித்த புரிதலை, பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில், உலக புற்றுநோய் விழிப்புணா்வு தினம் ஆண்டுதோறும் பிப். 4-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் எ.தேரணிராஜன் தலைமையில் நடைபெற்ற பேரணியில், துணை முதல்வா் டாக்டா் கவிதா, கண்காணிப்பாளா் டாக்டா் செல்வகுமாா், மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள் கலந்துகொண்டனா்.
அதைத்தொடா்ந்து உலக புற்றுநோய் தின விழிப்புணா்வு உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொண்டனா். பின்னா், புற்றுநோயை தடுக்கும் வழிமுறைகள், ஆரம்ப நிலையில் கண்டறிதல் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவ மாணவா்களின் விழிப்புணா்வு செயல் விளக்கம் நடைபெற்றது.