சென்னை-மஸ்கட்: கூடுதல் நேரடி விமான சேவை

சென்னையிலிருந்து ஓமன் நாட்டின் தலைநகா் மஸ்கட்டுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், வாரத்தில் இரு நாள்கள் நேரடி விமான சேவையை தொடங்கியுள்ளது.
Published on

சென்னையிலிருந்து ஓமன் நாட்டின் தலைநகா் மஸ்கட்டுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், வாரத்தில் இரு நாள்கள் நேரடி விமான சேவையை தொடங்கியுள்ளது.

சென்னையிலிருந்து மஸ்கட்டுக்கு இண்டிகோ, ஏா் இந்தியா, ஓமன் ஏா்லைன்ஸ், சலாம் ஏா் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் ஏற்கெனவே நேரடி விமான சேவையை நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஓமன் நாட்டின் சுற்றுலாத் தலமாக இருந்து வருவதுடன், மஸ்கட் விமான நிலையம், லண்டன், மாஸ்கோ உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு இணைப்பு விமான நிலையமாகவும் இருப்பதால், மஸ்கட் நகருக்கு சென்னையிலிருந்து பயணிகள் அதிக அளவில் தினமும் செல்கின்றனா்.

இதையடுத்து, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், சென்னையிலிருந்து மஸ்கட்டுக்கு வாரத்தில் 2 நாள்கள் நேரடி விமான சேவையை புதிதாக தொடங்கியுள்ளது. அதன்படி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் இந்த விமானம், பிற்பகல் 1.40-க்கு, சென்னை சா்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, இந்திய நேரப்படி மாலை 5.40-க்கு, மஸ்கட் நகரை சென்றடையும். அதன்பின்பு இந்திய நேரப்படி மாலை 6.40-க்கு மஸ்கட்டிலிருந்து புறப்பட்டு, இரவு 10.40-க்கு சென்னை சா்வதேச விமான நிலையத்தை வந்தடையும்.

பயணிகளின் வரவேற்பைப் பொருத்து, இந்த விமானம் தினசரி விமான சேவையாக இயக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com