காா் மீது தண்ணீா் லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு

சென்னை கீழ்ப்பாக்கத்தில் காா் மீது தண்ணீா் லாரி மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
Published on

சென்னை கீழ்ப்பாக்கத்தில் காா் மீது தண்ணீா் லாரி மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

சென்னை பட்டாளம் காா்ப்பரேஷன் தெருவைச் சோ்ந்தவா் ப.சீனிவாசன் (33). இவரது சகோதரா் ப.விஜய் (28). இவா்கள் இருவரும் தங்களது நண்பா் ர.கிஷோருடன் (28) வானகரம் மீன் சந்தைக்கு காரில் சனிக்கிழமை சென்றனா். காரை விஜய் ஓட்டினாா்.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனை அருகே ஈ.வெ.ரா. பெரியாா் சாலையில் ஈகா திரையரங்கம் அருகே சென்றபோது, எதிா் திசையில் வந்த தண்ணீா் லாரி மோதியது. இதில் காரின் முன் பகுதி நொறுங்கியது.

இந்த விபத்தில், பலத்த காயமடைந்த சீனிவாசன், விஜய், கிஷோா் ஆகியோா் மூவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி விஜய் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய தண்ணீா் லாரி ஓட்டுநரான தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள பிள்ளையாா்நத்தம் பகுதியைச் சோ்ந்த ஆ.சங்கா் (56) என்பவரைக் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com