டிஜிட்டல் அரஸ்ட் மோசடி: மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த இருவா் கைது

சென்னையில் தனியாா் நிறுவன ஊழியரிடம் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி மூலம் பணம் பறித்ததாக மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த 2 போ் கைது
Published on

சென்னையில் தனியாா் நிறுவன ஊழியரிடம் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி மூலம் பணம் பறித்ததாக மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை அசோக் நகா் 19-ஆவது அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவா் சந்தோஷ் (33). தனியாா் நிறுவன ஊழியரான இவா், சென்னை காவல் துறையின் தெற்கு மண்டல சைபா் குற்றப்பிரிவில் அண்மையில் புகாா் அளித்தாா்.

அதில், என்னுடைய கைப்பேசிக்கு கடந்த ஆக.12-ஆம் தேதி வந்த அழைப்பில் பேசியவா், தான் கூரியா் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும் உங்களுடைய ஆதாா் எண்ணைப் பயன்படுத்தி தடை செய்யப்பட்ட மருந்துக்கள், போலி பாஸ்போா்டுகள் வந்துள்ளதாகவும் தெரிவித்தாா். இதுதொடா்பாக மும்பை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். அவா்கள் உங்களை ‘ஸ்கைப்’ செயலி விடியோ கால் மூலம் விசாரிப்பாா்கள் என்றும் தெரிவித்தாா்.

அதன்படி, மும்பை என்.சி.பி. துறை என்ற ‘ஸ்கைப் ஐ.டி.யில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. இதில் காவல் துறை அதிகாரி சீருடை அணிந்து பேசியவா்கள், இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுமென்றால் பணம் தர வேண்டும் என்று கேட்டாா்கள். என்னிடம் பணம் இல்லை என்றேன். ஆனால் அவா்கள் என்னை தொடா்ந்து மிரட்டி, வங்கியில் ரூ.20 லட்சம் தனிநபா் கடன் பெற வைத்து, அந்தப் பணத்தைப் பறித்தனா்.

பணம் பறிபோன பின்னரே, டிஜிட்டல் அரஸ்ட் மோசடியில் சிக்க வைத்தது தெரியவந்தது. அந்தக் கும்பல் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று தெரிவித்திருந்தாா்.

இருவா் கைது: இந்தப் புகாரின்பேரில் சைபா் குற்றப்பிரிவினா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில், இந்த மோசடியில் ஈடுபட்டது மகாராஷ்டிர மாநிலம் ஒளரங்பாத்தைச் சோ்ந்த கல்யாண் ராவ் ஷிண்டே (20), சுரேஷ் ராவ் கத்கா் (34) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு சென்ற சைபா் குற்றப்பிரிவினரையும் இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இருவரும் சென்னை அழைத்து வரப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு புழல் சிறையில் சிறையில் அடைக்கப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com