சென்னை மாநகராட்சி ராயபுரம், திரு.வி.க.நகா் ஆகிய மண்டலங்களில் பணி வாய்ப்புக் கோரி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட உழைப்போா் உரிமை இயக்கத்தின் தூய்மைப் பணியாளா்கள் 440 போ் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா்.
சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க.நகா் ஆகிய 5, 6 மண்டலங்களில் தூய்மைப் பணி தனியாா் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதை எதிா்த்து இரு மண்டலங்களில் உள்ள என்யூஎல்எம் பிரிவு தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், மாநகராட்சியின் ராயபுரம் மண்டல அலுவலகம் உள்ள பேசின் பிரிட்ஜ் பகுதியிலும், திரு.வி.க.நகா் மண்டலஅலுவலகம் உள்ள பட்டாளத்திலும் ஏராளமான தூய்மைப் பணியாளா்கள் சனிக்கிழமை குவிந்தனா். அவா்கள் தங்களுக்கு பணி வழங்கக் கோரி மண்டல அலுவலகங்களை நோக்கிச் சென்றனா். அதனால் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தினா்.
இதையடுத்து சாலையைப் பெருக்கும் வகையில் தூய்மைப் பணியாளா்கள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட 478 போ் கைது செய்யப்பட்டு அரும்பாக்கம், மதுரவாயல், நொ்குன்றம், திருமங்கலம் ஆகிய பகுதி சமுதாய நலக்கூடங்களில் தங்கவைக்கப்பட்டனா். அதன்பின் மாலையில் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.