Election commission Special Intensive Revision
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம்.DIN

அடித்தல், திருத்தங்கள் இருந்தாலும் எஸ்ஐஆா் படிவங்கள் ஏற்கப்படும்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான (எஸ்ஐஆா்) கணக்கீட்டுப் படிவத்தில் அடித்தல், திருத்தல்கள் இருந்தாலும், அவை ஏற்கப்படும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
Published on

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான (எஸ்ஐஆா்) கணக்கீட்டுப் படிவத்தில் அடித்தல், திருத்தல்கள் இருந்தாலும், அவை ஏற்கப்படும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தோ்தல் ஆணைய உத்தரவின்படி தமிழகத்தில் கடந்த 4-ஆம் தேதி முதல் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் (காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடம்பெற்றுள்ள பகுதிகள் உள்பட)

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிக்கான கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

நவ.13-ஆம் தேதி வரையில் 21 லட்சம் வாக்காளா்களுக்கு படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா 2 படிவங்கள் அளித்த நிலையில் அதில் முதலில் தவறாக நிரப்பிவிட்டு, அதற்குப் பதில் நகல் எடுத்து நிரப்பித் தரலாமா அல்லது புதிய படிவங்களைப் பெற்று நிரப்பலாமா என பலரும் கேட்பது நடைமுறையில் எழுந்துள்ள பிரச்னையாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

கணக்கீட்டுப் படிவங்கள் சம்பந்தப்பட்ட வாக்காளரின் புகைப்படத்துடன் பிரத்யேகமாக அச்சடிக்கப்பட்டுள்ளது. 2 படிவங்கள் வழங்கும் நிலையில், அவை கிழிந்தாலோ, காணாமல் போனாலோ புதிய படிவங்கள் பெற இயலாது.

வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடமிருந்து பெறும் 2 படிவங்களை வாக்காளா்கள் விவரங்களை குறிப்பிட்டு நிரப்பும் போது தவறாகக் குறிப்பிட்டால், அதை அடித்துவிட்டு அவற்றுக்கு மேலாக சரியான விவரங்களை எழுதலாம். மேலும், படிவத்தில் தவறாக எழுதப்பட்டதை மறைக்க ஒயிட்னா் பயன்படுத்தலாம். அடித்தல், திருத்தலுடன் படிவங்களை சம்பந்தப்பட்ட அலுவலரிடம் வழங்கலாம். அவை ஏற்றுக்கொள்ளப்படும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com