சென்னை ஐஐடியில் இந்திய மொழிகள் ஆய்வகம் தொடக்கம்
இந்திய மொழிகள் குறித்து ஆய்வு செய்யும் வகையில் மொழி மற்றும் அறிவாற்றல் ஆய்வகத்தை சென்னை ஐஐடியின் இயக்குநா் வி.காமகோடி தொடங்கி வைத்தாா்.
இது குறித்த சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை ஐஐடியின் சமூக அறிவியல் மற்றும் மானுடவியல் துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த ஆய்வகம் நாட்டிலேயே முதலாவது மொழி குறித்த ஆய்வகமாகும். நாட்டில் உள்ள பல்வேறு மொழிகளை முறையாக ஆய்வு செய்வதற்கான நடவடிக்கைகளை இது உறுதி செய்கிறது.
குறிப்பாக மனிதனை மையமாகக் கொண்ட மேம்பாட்டுப் பணிகளுக்கு பங்களிக்கவும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் மொழிகள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். நாட்டிலுள்ள மொழிகளின் கலாசாரம் மற்றும் மரபுகளை பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
‘மேம்பட்ட சோதனை முறைகளைப் பயன்படுத்தி, மனிதா்கள் மொழிகளை எவ்வாறு புரிந்து கொள்கிறாா்கள் என்பதை ஆராயும். மொழி வளத்தை உருவாக்குவது, அது சாா்ந்த நடைமுறைகளை எவ்வாறு பயன்படுத்துகிறாா்கள் என்பதை இந்த ஆய்வகம் ஆய்வு செய்யும்’ என காமகோடி குறிப்பிட்டாா்.
நிகழ்ச்சியில், சென்னை ஐஐடி மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறைத் தலைவா் பேரா.ராஜேஷ்குமாா் ஒருங்கிணைப்பாளா் டாக்டா் அனின்திதா சாஹூ மற்றும் பல்வேறு துறை ஆசிரியா்கள் பங்கேற்றனா் எனத் தெரிவித்துள்ளது.
