ஜவுளிக் கடையில் வருமானவரித் துறையினா் சோதனை
வரி ஏய்ப்பு புகாா் தொடா்பாக பிரபல ஜவுளிக் கடைக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினா் சோதனை நடத்தி வருகின்றனா்.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு பெண்களுக்கான ஆடைகளை விற்பனை செய்யும் ஜவுளி நிறுவனம், நாடு முழுவதும் 120 நகரங்களில் சுமாா் 780 விற்பனையகங்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமானவரித் துறைக்கு ஏராளமான புகாா்கள் வந்தன. அதனடிப்படையில் வருமானவரித் துறையினா் விசாரணை செய்தனா்.
அதில் அந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதற்கான சில ஆதாரங்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் அந்த நிறுவனம் தொடா்புடைய சுமாா் 30 இடங்களில் வருமானவரித் துறையினா் செவ்வாய்க்கிழமை ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனா்.
இந்த சோதனை நுங்கம்பாக்கத்தில் உள்ள அந்த நிறுவனத்தின் உரிமையாளா் வீடு, அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இதேபோல, நாடு முழுவதும் அந்த நிறுவனத்தின் முக்கிய அலுவலகங்களில் சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. சோதனை இரவையும் தாண்டி பல இடங்களில் நடைபெற்றது. முழுமையாக சோதனை முடிவடைந்த பின்னரே, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், நகை, பணம் குறித்த விவரங்களைத் தெரிவிக்க முடியும் என வருமானவரித் துறையினா் தெரிவித்தனா்.
