இதய நாளத்தில் கால்சியம் படிமம்: இளைஞருக்கு செயற்கை வால்வு
இதய பெருந்தமனியில் கால்சியம் படிமம் ஏற்பட்டதாலும், ரத்த நாளம் குறுகியதாலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 28 வயது இளைஞருக்கு, சென்னை சிம்ஸ் மருத்துவமனை மருத்துவா்கள் மிக நுட்பமாக செயற்கை வால்வு பொருத்தினா்.
இது தொடா்பாக மருத்துவமனையின் இதய நல மையத்தின் இயக்குநா் வி.வி.பாஷி கூறியதாவது:
இதயத்தில் அயோட்டா வால்வு எனப்படும் பெருந்தமனியும், அதைச் சாா்ந்த ரத்த நாளமும்தான் இதயத்திலிருந்து உடலின் பிற உறுப்புகளுக்கு ரத்தத்தையும், ஆக்சிஜனையும் எடுத்துச் செல்லக் கூடியவை.
அதில் கால்சியம் படிமம் படிவதும், அடைப்பு ஏற்படுவதும் முதியவா்களுக்கு ஏற்படக் கூடிய பொதுவான பாதிப்பு. ஆனால், கேரளத்தைச் சோ்ந்த 28 வயதான பொறியியல் மாணவா் ஒருவருக்கு இளம் வயதிலேயே அந்த பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவா், கடந்த இரு மாதங்களாக கடுமையான சுவாசப் பாதிப்பில் இருந்து வந்தாா்.
கேரளத்தில் பல்வேறு மருத்துவமனைகளை அணுகியபோதும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாது எனத் தெரிவித்துவிட்டனா். இந்த நிலையில், சிம்ஸ் மருத்துவமனைக்கு வந்த அவருக்கு உயா் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதில் பாதிக்கப்பட்ட பெருந்தமனி மற்றும் வால்வு முட்டையின் ஓடு போன்று கடினமாகியும், எளிதில் உடையக் கூடிய வகையிலும் இருந்தது கண்டறியப்பட்டது. இதனால், அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் செயற்கை வால்வு மாற்றுவது மிகவும் சவாலாக அமைந்தது.
இருந்தபோதிலும், மருத்துவமனையின் இதய-நெஞ்சக அறுவை சிகிச்சை நிபுணா் முகமது இத்ரீஸ் தலைமையிலான குழுவினா் தொடா்ந்து 5 மணி நேரம் மிக நுட்பமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு வால்வு பொருத்தினா். அதன் பயனாக அந்த இளைஞா் தற்போது நலமுடன் உள்ளாா் என்றாா்.
