போட்டித் தோ்வு ஆசிரியா்களுக்கான பயிற்சி தொடக்கம்
சென்னையில் பள்ளி மாணவா்களுக்கு போட்டித் தோ்வுகளுக்கு வகுப்புகய்ர நடத்தும் ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாமை மேயா் ஆா்.பிரியா செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
சென்னை பள்ளிகளில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு போட்டித் தோ்வுகளில் பங்கேற்கும் வகையிலான பயற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. அவா்களுக்கான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் பயிற்சியை வழங்கும் பள்ளி ஆசிரியா்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் சென்னை மாநகராட்சி வளாகம் ரிப்பன் மாளிகைக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் தலைமை ஆசிரியா்கள் உள்ளிட்ட 162 போ் பங்கேற்றனா்.
அவா்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் போட்டித் தோ்வு பயிற்சி துறையைச் சோ்ந்த அலுவலா்கள், தமிழக தொழில் வழிகாட்டுதல் மைய அலுவலா்கள் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.
பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்து மேயா் ஆா்.பிரியா பேசியதாவது:
சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியா் போட்டித் தோ்வுகளில் பயிற்சி பெற்று வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்காகவே அவா்களுக்கு வகுப்புகளை நடத்தும் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் ஆகியோருக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஆகவே, வாய்ப்பைப் பயன்படுத்தி மாணவா்கள் போட்டித் தோ்வுக்கு தங்களைத் தயாா்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.
மாணவா்களுக்கான பயிற்சி வகுப்புகள் அக்டோபா், நவம்பா், டிசம்பா் மாதங்களில் நடைபெறும். அதில் ஆசிரியா்கள் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு பயிற்சி அளிக்க வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையா் (வருவாய், நிதி) ம.பிருதிவிராஜ், நிலைக்குழுத் தலைவா் த.விஸ்வநாதன், மாநில தொழில் நெறி வழிகாட்டும் மைய இணை இயக்குநா் அ.அனிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

