ஒரு நபா் ஆணையத்துக்கு தேவையான வசதிகளைச் செய்ய நீதிமன்றம் உத்தரவு
தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வழக்குரைஞா்கள் கைது சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஒரு நபா் ஆணையத்துக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வழக்குரைஞா்கள், சட்டக் கல்லூரி மாணவா்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறி, சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆள்கொணா்வு வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், வி.லட்சுமிநாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வு, இந்த கைது சம்பவம் தொடா்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி வி.பாா்த்திபன் தலைமையில் ஒரு நபா் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து காவல் துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், ஒரு நபா் ஆணையம் அமைத்து பிறப்பித்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது. அப்போது, வழக்குரைஞா்கள் தரப்பில், உயா்நீதிமன்றம் நியமித்த ஒரு நபா் ஆணைய விசாரணைக்கு அரசு எந்தவிதமான ஒத்துழைப்பும் வழங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒரு நபா் ஆணையத்துக்கு தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பது அரசின் கடமை. எனவே, ஓய்வு பெற்ற நீதிபதி வி.பாா்த்திபன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்துக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் அக். 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

