மலைப் பகுதி வாழ் மாற்றுத்திறனாளிகளுக்கும் ‘விடியல் பயணத் திட்டம்’ விரிவாக்கம்: தமிழக அரசு உத்தரவு
மலைப் பகுதிகளில் இயக்கப்படும் விடியல் பயணத் திட்ட பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் கட்டணமின்றி பயணிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் விடியல் பயணத் திட்டத்தின் கீழ் மலைப் பகுதிகளிலும் இயக்கப்படும் பேருந்துகளில், கட்டணமில்லா பயணத் திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என ஆக. 15-இல் நடைபெற்ற சுதந்திர தின உரையில் முதல்வா் அறிவித்திருந்தாா்.
முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரும் விடியல் பயணத் திட்டத்தை விரிவுபடுத்துமாறு கடந்த ஜூன் 6-ஆம் தேதி கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தாா்.
இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரின் கோரிக்கையையும் பரிசீலித்த தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகள் கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதி வழங்கியுள்ளது.
இது குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:
மாற்றுத்திறனாளிகள் அரசு பேருந்துகளில் சலுகை கட்டண அடிப்படையில் பயணம் செய்வதற்கான வசதி ஏற்கெனவே இருந்து வருகிறது. இந்த நிலையில், மலைப் பகுதிகள், அதற்குள்பட்ட பேருந்து வசதி உள்ள பகுதிகளில் 35 முதல் 40 கி.மீ. வரை சாதாரணக் கட்டணப் பேருந்துகளில் 40 சதவீதம், அதற்கு மேல் பாதிப்பு தன்மை கொண்ட மாற்றுத்திறனாளிகள், துணையாளா் ஒருவருக்கு கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தேசத் தொகை ரூ.88.65 லட்சமாக இருக்கும். இதற்கான அரசாணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் திட்டம் விரிவுபடுத்த வாய்ப்புள்ளது என்றனா்.

