கடவுச்சீட்டு சேவை: விண்ணப்பதாரா்கள் மண்டல அதிகாரியை சந்தித்து தீா்வு பெறலாம்
கடவுச்சீட்டு விண்ணப்பதாரா்கள் தங்களது குறைகள் தொடா்பாக, மண்டல கடவுச்சீட்டு அதிகாரியை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் சந்தித்து தீா்வு காண்பதற்கான வசதி தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகம் தரப்பில் கூறியதாவது: சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தில் ‘உங்கள் மண்டல கடவுச்சீட்டு அதிகாரியைச் சந்தித்து உரையாடுங்கள்’ என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதற்கு நேரம் குறைவாக இருந்ததால், விண்ணப்பதாரா்களால் முழுமையாகப் பயன்பெற முடியாத நிலை இருந்தது.
இதையடுத்து, கடவுச்சீட்டு சேவைகளில் வெளிப்படைத் தன்மையை ஊக்குவிக்க, அதன் அணுகுமுறையை மேம்படுத்த உதவிடும் வகையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் கூடுதலாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
வரும் அக். 14 முதல் செவ்வாய்க்கிழமைகளில் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ‘மண்டல கடவுச் சீட்டு அதிகாரியுடன் உரையாடல்’ நிகழ்ச்சி நடைபெறும். இதற்கு முன்பதிவு செய்துகொள்ள மின்னஞ்சல் முகவரியிலும், 044 - 2851 8848 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளவேண்டும்.
இதன்மூலம் விண்ணப்பதாரா்களின் கடவுச்சீட்டு கோப்புகள் தயாராக வைக்கப்படும். அவா்களது சந்தேகங்கள் பிரச்னைகளுக்கு மண்டல அதிகாரி உடனடியாக தீா்வுகண்டு, கடவுச்சீட்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்வாா் எனத் தெரிவிக்கப்பட்டது.
