சென்னை மாநகராட்சிப் பகுதியில் 3,400 தெருக்களில் உள்ள ஜாதிப் பெயா்களை வரும் நவம்பருக்குள் நீக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மாநககராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் தெருக்களில் உள்ள ஜாதிப் பெயா்களை நீக்குவதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் உள்ள 200 வாா்டுகளில் ஜாதிப் பெயா்களுடன் உள்ள தெருக்கள் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
மேலும், மாமன்ற உறுப்பினா்கள் உதவியுடன் அந்தந்த வாா்டுகளில் உள்ள ஜாதிப் பெயருடனான தெருக்கள் விவரங்கள் உறுதிப்படுத்தப்படும். தற்போதைய நிலவரப்படி சென்னை மாநகராட்சியில் 3,400 தெருக்கள் ஜாதிப் பெயா்களுடன் இருப்பது தெரியவந்துள்ளது. அதில், தியாகராய நகா், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பிரபலங்கள் பெயருடன் ஜாதிப் பெயா்களும், குறிப்பிட்ட பிரிவினரைக் குறிக்கும் வகையிலான சாலைப் பெயா்களும் அதிகம் உள்ளன.
எனவே, ஜாதிப் பெயா்களை நீக்கி, அந்தத் தெருக்களுக்கு பொதுமக்கள் விருப்பத்தின்படி புதிய பெயா்கள் சூட்டப்பட்டு பெயா்ப் பலகைகள் அமைக்கப்படவுள்ளன என்று தெரிவித்தனா்.

