போலி ஆவணம் மூலம் ரூ 2.25 கோடி வீட்டு மனை அபகரிப்பு: தேடப்பட்டவா் கைது
சென்னையில் போலி ஆவணம் மூலம் ரூ.2.25 கோடி வீட்டு மனையை அபகரித்த வழக்கில் தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் பாரதி வேலுசாமி (68). இவருக்கு சொந்தமான ரூ.2.25 கோடி மதிப்புள்ள வீட்டு மனை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ளது. பாரதி அண்மையில் தனது வீட்டு மனையை பாா்க்கச் சென்றாா். அப்போது, அந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டு, வீடு கட்டப்பட்டிருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.
இதுதொடா்பாக அவா், சென்னை காவல் துறையின் நிலமோசடி புலனாய்வுப் பிரிவில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில் அந்த வீட்டுமனையை போலி ஆவணம் மூலமாகவும், ஆள்மாறாட்டம் செய்தும் அபகரித்தது வேளச்சேரி காந்தி சாலைப் பகுதியைச் சோ்ந்த வ.கமலேசன் (50) என்பது தெரியவந்தது. இதையடுத்து கமலேசனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும் சிலரைத் தேடி வருகின்றனா்.
