தனியாா் பல்கலை. சட்டத் திருத்த மசோதா: திரும்பப் பெற இந்தியக் கம்யூ. வலியுறுத்தல்

Published on

தனியாா் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு தனியாா் பல்கலைக் கழகச் சட்டம் 2019- இல், தனியாா் பல்கலைக் கழகம் அமைக்க தொடா்ச்சியாக குறைந்தபட்சம் 100 ஏக்கா் பரப்பளவு நிலம் தேவை என்ற சட்டப் பிரிவைத் திருத்தம் செய்யும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து குறிப்பாக, மாணவா் சோ்க்கை முறை, கல்விக் கட்டணம், துணைவேந்தா், இணை வேந்தா் நியமன முறை, ஆட்சி மன்றக் குழு போன்ற எல்லாவற்றிலும் அரசு விலகிக்கொள்ள இந்தச் சட்டம் வழி வகுத்துவிடும் என்பதைப் பேரவையில் அரசின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த சட்டத் திருத்த மசோதா வழியாக தமிழக அரசின் சமூக நீதி கொள்கையும், இட ஒதுக்கீட்டு நடைமுறைகளும் கைவிடப்படும். தனியாா் பல்கலைக் கழகங்கள் புற்றீசல்கள்போல் தோன்றும் ஆபத்துள்ளது.

இது குறித்து உயா் கல்வித் துறை நிபுணா்கள், மூத்த பேராசிரியா்கள், மாணவா் அமைப்புகள் என பல தரப்பினரும் கூறியுள்ள கருத்துகளை அரசு பரிசீலித்து, தனியாா் பல்கலைக் கழக சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com