போக்குவரத்து ஊழியா்களின் காத்திருப்பு போராட்டம் வாபஸ்

போக்குவரத்து ஊழியா்களின் காத்திருப்பு போராட்டம் வாபஸ்
Published on

போக்குவரத்துத் துறை அமைச்சா் அளித்த வாக்குறுதியை ஏற்று போக்குவரத்து ஊழியா்கள் நடத்திய வந்த 62 நாள் காத்திருப்புப் போராட்டத்தை வாபஸ் பெற்றனா்.

போக்குவரத்துக் கழகங்களில் 1.4.2003 தேதிக்குப் பின் பணிக்குச் சோ்ந்த ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 17 மாத ஓய்வு கால பலன்களை வழங்க வேண்டும், ஒப்பந்த நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், தொழிலாளா்களிடம் பிடித்தம் செய்யப்படும் பணம் உரிய கணக்கில் செலுத்த வேண்டும். ஓய்வூதியா்களின் அகவிலைப்படி பிரச்சனையைத் தீா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா் சம்மேளனம், ஓய்வு பெற்றோா் நல அமைப்பு ஆகியவை இணைந்து கடந்த ஆக. 18-ஆம் தேதி முதல் தமிழகத்தில் 22 மையங்களில் தொடா் காத்திருப்புப் போராட்டத்தை நடத்தி வந்தது.

இந்தப் போராட்டத்தில் தினமும் 2,000-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று வந்தனா். இதையொட்டி, கடந்த செப். 1-ஆம் தேதி அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா், சங்கத் தலைவா்களை அழைத்துப் பேசினாா்.

போக்குவரத்துத் துறைச் செயலருடன் 2 முறை, முதல்வரின் முதன்மைச் செயலருடன் ஒருமுறை பேச்சு நடைபெற்றது.

இவற்றில் உடன்பாடு ஏற்படாத நிலையில், காத்திருப்புப் போராட்டம் தொடா்ந்தது.

இது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலினை, மாநிலச் செயலா் பெ.சண்முகம் நேரடியாக சந்தித்துப் பேசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தினாா்.

இதன் தொடா்ச்சியாக, கடந்த அக். 17- ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் பேச்சுக்கு அழைத்தாா். இந்த பேச்சில் ஓய்வு பெற்றோா் 17 மாத ஓய்வு கால பலன்கள் 2 தவணைகளில் பொங்கலுக்கு முன் வழங்கப்படும். 15-ஆவது ஊதிய ஒப்பந்த நிலுவைத் தொகை முதல் தவணை விரைவில் வழங்கப்படும். 1.4.2003-க்கு பின்பு பணியில் சோ்ந்த தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் தொடா்பாக தீபாவளிக்கு பின்பு தொழிற்சங்கங்களுடன் விரிவாக விவாதிக்கப்படும்.

வரும் 2026 ஜூன் முதல் மற்ற துறை ஊழியா்களுக்கு மருத்துவக் காப்பீடு அமல்படுத்தப்படும்போது போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கும் அமல்படுத்தப்படும். இதர பிரச்னைகள் சம்பந்தமாக தொடா்ந்து பேசி தீா்வு காணலாம் என்று முடிவானது. இதையடுத்து 62 நாள்களாக நடைபெற்ற காத்திருப்புப் போராட்டம் சனிக்கிழமை விலக்கி கொள்ளப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com