போக்குவரத்து காவலா் மீது தாக்குதல்: எம்எல்ஏ மீது புகாா்

Published on

சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து காவலரைத் தாக்கியதாக காங்கிரஸ் எம்எல்ஏ மீது காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாா் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னை அண்ணா சாலை ஸ்பென்சா் பிளாசா வணிக வளாகம் எதிரில் போக்குவரத்து காவலா் பிரபாகரன் என்பவா் சனிக்கிழமை பிற்பகலில் போக்குவரத்தைச் சீா் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அண்ணா சாலையில் மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ராஜகுமாருக்கு சொந்தமான காரை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த காரை எடுக்குமாறு போக்குவரத்து காவலா் பிரபாகரன் தெரிவித்துள்ளாா்.

இதனால், எம்எல்ஏ மற்றும் அவரது ஆதரவாளா்கள் போக்குவரத்து காவலா் பிரபாகரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது ஆத்திரமடைந்த எம்எல்ஏ ராஜகுமாா் தரப்பினா் போக்குவரத்து காவலா் பிரபாகரனை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து காவலா் பிரபாகரன் சாா்பில் அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், காவல் துறை உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com