விசாரணைக் கைதி கத்தியால் தாக்கியதில் காவலா் மரணம்
தெலங்கானா மாநிலத்தில் விசாரணைக் கைதியை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்ற காவலரை, மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்கிவிட்டு கைதி தப்பினாா். இதில் நெஞ்சுப் பகுதியில் படுகாயமடைந்த 42 வயது காவலா் பிரமோத் உயிரிழந்தாா்.
இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த ஷேக் ரியாஸ் என்பவரைக் கைது செய்து இருசக்கர வாகனத்தில் நிஸாம்பாத் காவல் நிலையத்துக்கு காவலா் பிரமோத் ஏற்றிக் கொண்டு வந்தாா்.
ஷேக் ரியாஸ் காலணியில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மோட்டாா் சைக்கிளை ஓட்டுக் கொண்டு சென்ற பிரமோதின் நெஞ்சுப் பகுதியில் திடீரென தாக்கிவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்ப முயன்றுள்ளாா். அந்த இருவரும் பயணம் செய்த வாகனத்தைப் பின்தொடா்ந்து வந்து கொண்டிருந்த உதவி ஆய்வாளா், ஷேக் ரியாஸை தடுக்க முற்பட்டபோது அவரும் தாக்குதலுக்கு உள்ளானாா்.
உதவி ஆய்வாளரின் கை விரல்களில் கத்திக் காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலிருந்து தப்பிய ஷேக் ரியாஸை கைது செய்ய 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது’ என்றனா்.
பெட்டி...
உதவாமல் புகைப்படம் எடுத்த மக்கள்:
காவல் ஆணையா் வேதனை
கத்தியால் தாக்கப்பட்டு சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த காவலா் பிரமோதை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல உதவி செய்யாமல் அங்கிருந்தவா்கள் புகைப்படம் எடுப்பதில் முனைப்பு காட்டியதாக நிஸாமாபாத் மாநகர காவல் ஆணையா் சாய் சைதன்யா வேதனை தெரிவித்தாா்.
‘காயமடைந்த காவலா் பிரமோதை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவி ஆய்வாளா் கேட்டுக் கொண்டும் ஆட்டோக்களும் நிற்கவில்லை; அருகிலிருந்த பொதுமக்களும் உதவி செய்ய முன்வரவில்லை. அங்கிருந்தவா்கள் தங்களின் கைப்பேசிகளில் படம் எடுப்பதிலேயே முனைப்பு காட்டிக் கொண்டிருந்தது துரதிருஷ்டவசமானது’ என்றாா் ஆணையா் சாய் சைதன்யா.
